கீழ்ப்பாலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர்: ஆபத்தை உணராமல் ரெயில்வே கேட்டை கடந்து செல்லும் மக்கள்


கீழ்ப்பாலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர்: ஆபத்தை உணராமல் ரெயில்வே கேட்டை கடந்து செல்லும் மக்கள்
x
தினத்தந்தி 5 Dec 2019 10:45 PM GMT (Updated: 5 Dec 2019 6:52 PM GMT)

கூடூர் காட்டாற்று கீழ்ப்பாலத்தில் அடிக்கடி தண்ணீர் தேங்கி நிற்பதால் ஆபத்தை உணராமல் ரெயில்வே கேட்டை மக்கள் கடந்து செல்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை ஆகும்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள கூடூர் காட்டாற்று பாலம் அருகில் கல்யாணமகாதேவி செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த பகுதியில் கீழகூத்தங்குடி, மேலகூத்தங்குடி, அன்னுக்குடி உள்பட பல கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலை, மருத்துவ வசதி போன்ற எந்த தேவையாக இருந்தாலும் திருவாரூருக்கு தான் வர வேண்டும். இந்த பாதையில் காட்டாற்று பாலம் அருகில் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி செல்லும் ரெயில் பாதையை கடந்து செல்ல வேண்டும்.

போராட்டங்கள்

இந்த ரெயில்பாதை அகல ரெயில் பாதையாக மாற்றும்போது ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை அகற்றிவிட்டு காட்டாற்று கரையில் சிமெண்டு கான்கிரீட் தடுப்பு அமைத்து கீழ்ப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாதையால் எந்தவித பயனும் தராது. மழை, வெள்ள காலங்களில் கீழ்ப்பாலம் மூழ்கும் என கிராம மக்கள் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தியும் எந்தவித பயனும் அளிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் காட்டாற்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் கீழ்ப்பாலத்திற்குள் புகுந்தது.

தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து ரெயில் தண்டவாள பாதையில் தற்காலிகமாக மண்ணை கொட்டி வழிப்பாதையாக பயன்படுத்தி வந்தனர்.

தற்காலிக பாதை

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ரெயில்வே நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு கீழ்ப்பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றி தற்காலிகமாக சீரமைத்தனர். இதனை தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையினால் கீழ்ப்பாலம் மீண்டும் முழுமையாக மூழ்கியது.

இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ரெயில்பாதையை கடக்கும் வகையில் ஜல்லிகளை கொட்டி தற்காலிக பாதை அமைத்தனர். இந்த பாதையில் தான் அப்பகுதி கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். முற்றிலும் தண்ணீர் மூழ்கிய கீழ்ப்பாலத்திற்கு மாற்று தீர்வுக்கான நடவடிக்கையை ரெயில்வே நிர்வாகம் இதுவரை எடுக்கவில்லை. இதனால் தொடர்ந்து தற்காலிக வழிப்பாதையில் மோட்டார் சைக்கிள் தொடங்கி டிராக்டர் வரை ஆபத்தை உணராமல் கடந்து செல்கிறது.

ஆபத்தான பயணம்

இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது:-

கீழ்ப்பாலத்தில் உள்ள தண்ணீரை முழுமையாக அப்புறப்படுத்தி வெளியேற்றவில்லை. ஆதலால் வேறு வழியின்றி ஆபத்தான நிலையில் ரெயில்பாதையை கடந்து செல்கிறோம். தற்போது திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரெயில் பாதையில் பட்டுகோட்டை ரெயில் மட்டுமே இயக்கப்படுவதால் பாதிப்பு இல்லை. கூடுதலாக ரெயில்கள் இயக்கினால் இந்த பாதையை கடந்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும்.

எனவே ரெயில்வே நிர்வாகம் கிராம மக்களின் நலன் கருதி மீண்டும் ரெயில்வே கேட் அமைத்து தர வேண்டும். அப்போது தான் எங்களின் ஆபத்தான பயணத்திற்கு விடிவு பிறக்கும். மேலும் கீழ்ப்பாலத்தில் தண்ணீர் தேங்காதபடி பார்த்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story