தாயை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரம்: மனைவியை கொலை செய்துவிட்டு - தற்கொலை நாடகம் ஆடிய டிரைவர்


தாயை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரம்: மனைவியை கொலை செய்துவிட்டு - தற்கொலை நாடகம் ஆடிய டிரைவர்
x
தினத்தந்தி 5 Dec 2019 11:15 PM GMT (Updated: 5 Dec 2019 7:03 PM GMT)

தாயை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை கிண்டி நேருநகர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 25). கார் டிரைவர். இவருடைய மனைவி இலக்கியா (24). இவர், கிண்டியில் உள்ள தனியார் மாலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர்களது சொந்த ஊர் திருவண்ணாமலை ஆகும்.

கடந்த 30-ந் தேதி நள்ளிரவு தனது மனைவி இலக்கியா, வீட்டில் தூக்குப்போட்டு கொண்டதாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு வேளச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்து பார்த்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுபற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் இலக்கியாவுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி கிண்டி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் இலக்கியா உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பின்னர்தான் அவரது உடல் தூக்கில் தொங்கவிடப்பட்டு உள்ளதாக தெரியவந்தது.

இதையடுத்து கிண்டி போலீசார், திருவண்ணாமலைக்கு சென்ற ஜெயராஜை, சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில் அவர், தனது மனைவி இலக்கியாவை தானே கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, உடலை தூக்கில் தொங்கவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டார்.

“நாங்கள் இருவரும் வேலைக்கு சென்று விடுவதால் வீட்டில் சமையல் செய்யாமல் ஓட்டலில் வாங்கி சாப்பிட்டோம். இதனால் ஊரில் இருந்து எனது தாயை அழைத்து வந்து சமையல் செய்ய வைத்துக்கொள்ளலாம் என்று கூறியதற்கு இலக்கியா எனது தாயை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரத்தில் கொன்றதாக” போலீசாரிடம் ஜெயராஜ் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

இதையடுத்து தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றிய போலீசார் கார் டிரைவர் ஜெயராஜை கைது செய்தனர்.

Next Story