மழையால் சேதம் அடைந்த கரும்பு வயல்களை சீரமைக்கும் பணி இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை


மழையால் சேதம் அடைந்த கரும்பு வயல்களை சீரமைக்கும் பணி இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 6 Dec 2019 4:30 AM IST (Updated: 6 Dec 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

மழையால் சேதம் அடைந்த கரும்பு வயல்களை சீரமைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சேதம் அடைந்த கரும்பு வயல்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவிரி கரையோர கிராமங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்புகள் அதிகளவில் பயிரிடப்படுவது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டும் சித்திரை பட்டத்தில் விதைப்பு செய்த பொங்கல் கரும்புகள் நல்ல நிலையில் விளைந்திருந்தன. கடந்த மாதத்தின் இறுதி வாரத்தில் தொடர்ந்து சில நாட்கள் நீடித்த கன மழை காரணமாக திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கரும்பு வயல்கள் சேதம் அடைந்தன.

வயல்களில் விளைந்திருந்த பொங்கல் கரும்புகள் அடியோடு சாய்ந்து காணப்பட்டன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர். தற்போது மழை சற்று ஓய்ந்து இருப்பதால் சேதம் அடைந்த கரும்பு வயல்களை சீரமைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இழப்பீடு வழங்க வேண்டும்

சாய்ந்த கரும்புகளை நிமிர்த்தி கட்டுவதற்கு கூடுதல் செலவு ஆவதால் விவசாயிகள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். திருக்காட்டுப்பள்ளி அருகே ஒன்பத்துவேலி, நடுப்படுகை உள்ளிட்ட கிராமங்களில் கரும்பு வயல்களில் தேங்கிய மழைநீர் வடியவில்லை. இதனால் கரும்புகளை நிமிர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிந்த பின்னர் தான் கரும்புகளை நிமிர்த்த கட்ட இயலும் என விவசாயிகள் கூறுகிறார்கள்.

சிவந்திதிடல் உள்ளிட்ட பகுதிகளில் சாய்ந்த கரும்புகளின் வேர் பகுதியில் எறும்புகள் புகுந்து சாற்றை உறிஞ்சி சேதத்தை ஏற்படுத்தி இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் மேலும் மழை இல்லாமல் இருந்தால் விளைந்த கரும்புகளை காப்பாற்றி விடலாம் என விவசாயிகள் கருதுகின்றனர். திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மழையால் சேதம் அடைந்த கரும்பு வயல்களை கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story