தஞ்சை சச்சிதானந்த மூப்பனார் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக போக்குவரத்து நிறுத்தம்


தஞ்சை சச்சிதானந்த மூப்பனார் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக போக்குவரத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 5 Dec 2019 10:45 PM GMT (Updated: 5 Dec 2019 7:29 PM GMT)

தஞ்சை சச்சிதானந்த மூப்பனார் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக தஞ்சை கரந்தை, பள்ளிஅக்ரகாரம், வடக்குவாசல், மாரிக்குளம் சுடுகாடு ஆகிய இடங்களில் கழிவுநீர், நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் உள்ள கழிவுநீர், நீரேற்று நிலையங்கள் வழியாக ராட்சத குழாய்கள் மூலம் தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் பகுதியில் உள்ள சமுத்திரம் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. அந்த தண்ணீர் பாசனத்துக்கு வாய்க்காலில் திறந்து விடப்படுகிறது.

விடுபட்ட பணிகள்

இதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆள்நுழை குழிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதே போல மாநகரில் பல்வேறு இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தவிர புதிதாக இணைப்பு வழங்கப்பட வேண்டிய பகுதிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சை மணிமண்டபம் அருகே புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டிடத்திற்கும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இணைப்பு பணி

இதற்காக புதிய கட்டிடத்தில் இருந்து குழாய்கள் பதிக்கப்பட்டு, நவநீதபுரம் சச்சிதானந்தமூப்பனார் சாலையில் உள்ள இணைப்பு பகுதியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.. இதற்காக கட்டிடத்தின் இருந்து மெயின் சாலை அருகே வரை பொக்லின் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன.

மெயின் சாலையில் இணைக்கும் பணி நேற்று நடந்தது. இதற்காக சாலையில் குழி தோண்டப்பட்டது. மேலும் இந்த பகுதியில் போலீஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் ஓட்டல்கள் போன்றவை உள்ளன. மேலும் இந்த வழியாக ரெயில்வே குட்ஷெட் பகுதியில் இருந்து லாரிகளும் இயக்கப்படும்.

போக்குவரத்து நிறுத்தம்

ஆனால் சாலையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து இந்த சாலையில் நேற்று போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து தஞ்சை ராமநாதன் ரவுண்டானா பகுதியில் இதற்கான அறிவிப்பு பேனரும் வைக்கப்பட்டு அங்கு போலீசாரும் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் தஞ்சை மேம்பாலம் பகுதியிலும் பணிகள் நடைபெறுவது குறித்த அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் சென்று வந்தன.


Next Story