புதுக்கோட்டை அருகே சரக்கு வேன் மீது லாரி மோதியதில் 3 பெண்கள் பலி; 13 பேர் படுகாயம்


புதுக்கோட்டை அருகே சரக்கு வேன் மீது லாரி மோதியதில் 3 பெண்கள் பலி; 13 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Dec 2019 11:15 PM GMT (Updated: 5 Dec 2019 7:41 PM GMT)

புதுக்கோட்டை அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது சரக்கு வேன் மீது லாரி மோதியதில் 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.

ஆலங்குடி,

புதுக்கோட்டை அருகே உள்ள முள்ளூர் கிராமத்தில் இருந்து 15-க்கும் மேற்பட்டோர் ஒரு சரக்கு வேனில் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள மங்கனூருக்கு, துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். சரக்கு வேனை முள்ளூரை சேர்ந்த டிரைவர் ராஜே‌‌ஷ்குமார் ஓட்டினார். சரக்கு வேன் இச்சடி அருகே சென்று கொண்டிருந்தது.

அதற்கு பின்னால் ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் லாரி எதிர்பாராதவிதமாக சரக்கு வேன் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் முள்ளூர் கிராமத்தை சேர்ந்த பெரமையா மனைவி அம்சவள்ளி (வயது 50), முத்துக்குமார் மனைவி மாதவி (43) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். கண்ணையா மனைவி பாக்கியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

13 பேர் படுகாயம்

மேலும் சரக்கு வேனில் சென்ற முருகேசன் மனைவி தேவி, லெட்சுமணன் மனைவி சுந்தரவள்ளி, முருகன் மனைவி ராஜாத்தி, கருப்பையா மனைவி பாக்கியம், முத்துக்குமார் மனைவி மங்கையர்கரசி, முருகேசன் மனைவி அம்சவள்ளி, குமார் மனைவி சண்முகவள்ளி, விஜயகுமார் மனைவி கீதா, சீனிவாசன் மனைவி உ‌ஷா, அண்ணாத்துரை மனைவி பழனியம்மாள், மாரிமுத்து மனைவி செல்லம்மாள், கருப்பையா மனைவி செல்லம், டிரைவர் ராஜே‌‌ஷ்குமார் ஆகிய 13 பேர் படுகாயமடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் இறந்த அம்சவள்ளி, மாதவியின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் கவிழ்ந்த சரக்கு வேனை தூக்கி நிறுத்தினார்கள். படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 1 பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சம்பட்டிவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் உமா மகேஸ்வரி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று இறந்தவர்களின் உறவினர்களையும், படுகாயமடைந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Next Story