கல்வராயன்மலையில் வாலிபர் கொலை: பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு


கல்வராயன்மலையில் வாலிபர் கொலை: பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 5 Dec 2019 10:45 PM GMT (Updated: 5 Dec 2019 7:44 PM GMT)

கல்வராயன் மலையில் வாலிபர் கொலை தொடர்பாக பெண்கள் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள மலையரசன்பட்டு கிராமத்தைச்சேர்ந்தவர் பழனி மகன் மதியழகன்(வயது26). இவருக்கு சிவரஞ்சனி(24) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மதியழகனுக்கும், அதே ஊரைச்சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி மதியழகன் கொடுந்துறையில் உள்ள ரே‌‌ஷன் கடைக்கு சென்று அரிசி வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் கொடுத்து விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

அப்போது மலையரசன்பட்டில் உள்ள சித்தனாகாட்டுக்கொட்டாய் அருகே மதியழகனை சிலர் வழிமறித்து மிளகாய் பொடியை தூவி கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடல் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பழனிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பழனி மற்றும் அவரது உறவினர்கள் சென்று பார்த்த போது மதியழகன் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு கரியாலூர் போலீசார் விரைந்து வந்து மதியழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப்பின் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த படுகொலை சம்பவம் குறித்து பழனி கொடுத்த புகாரின் பேரில் அதே ஊரைச்சேர்ந்த மாணிக்கம், அவரது மகன் ராமே‌‌ஷ்வரன், மனைவி பழனியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் காட்டு ராஜா, ரஞ்சிதா, சகாதேவன், தீர்த்தன் ஆகிய 7 பேர் மீது கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கொலையாளிகளை பிடிக்க கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் மேற்பார்வையில் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி, கரியாலூர் சப்-இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் தலை மையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்யக்கோரி மதியழகனின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கரியாலூர் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு சென்று இன்ஸ்பெக்டர் வள்ளியிடம் முறையிட்டனர்.

Next Story