திருப்பூர் மாநகராட்சி ஊழியர் கொலையில் 2 வாலிபர்கள் கைது
திருப்பூர் மாநகராட்சி ஊழியரை கொலை செய்த வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர்,
திருப்பூர் பெரிச்சிப்பாளையம் எம்.ஆர். தோட்டம் எம்.ஆர். காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 43). இவர் திருப்பூர் மாநகராட்சி 50,51-வது வார்டு பகுதிகளில் குடிநீர் திறப்பாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 1-ந் தேதி கரூரில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்துக்காக ராமச்சந்திரன் அதிகாலை 4 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இந்தநிலையில் காலை 8 மணி அளவில், தாராபுரம் ரோடு சங்கிலிப்பள்ளம் பாலம் அருகே ராமச்சந்திரன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். கூர்மையான ஆயுதத்தால் முகத்தில் சரமாரியாக அவர் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். கைகளில் சிராய்ப்பு காயங்கள் இருந்தன.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் தெற்கு போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் பத்ரி நாராயணன் மேற்பார்வையில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் தனிப்படையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரிமளம் பகுதியை சேர்ந்த சமயபாண்டி(24), கும்பகோணம் திருவிடைமருதூரை சேர்ந்த பிரதாப்(22) ஆகிய 2 பேரை தனிப்படையினர் வெள்ளியங்காடு பகுதியில் வைத்து பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று அதிகாலை உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக ராமச்சந்திரன் பஸ் ஏறுவதற்காக சங்கிலிப்பள்ளம் பாலம் அருகே நடந்து வந்துள்ளார். அப்போது அவரை சமயபாண்டி, பிரதாப், அவரது நண்பர் ராஜதுரை ஆகிய 3 பேர் வழிமறித்து அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றபோது தள்ளு-முள்ளு ஏற்பட்டுள்ளது. பின்னர் 3 பேரும் சேர்ந்து ராமச்சந்திரனை பாட்டிலால் குத்தி, பாலத்தின் சுவரில் தலையை மோதி கீழே தள்ளி விட்டு கொலை செய்து, அவரிடம் இருந்து ரூ.6 ஆயிரம், அவர் அணிந்திருந்த 4 கிராம் தங்க மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியது தெரியவந்தது.
சமயபாண்டி, பிரதாப், ராஜதுரை ஆகிய 3 பேரும் திருப்பூரில் உள்ள பனியன் எம்ப்ராய்டரி நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்ததும், மது குடிப்பதற்காக வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டபோது கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சமயபாண்டி, பிரதாப் ஆகிய 2 பேரையும் தெற்கு போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். ராஜதுரையை தேடிவருகிறார்கள்.
சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் ஆகியோர் பாராட்டினார்கள்.
Related Tags :
Next Story