தென்காசி மாவட்டத்துடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை 11 கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
தென்காசி மாவட்டத்துடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை 11 கிராமமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி,
நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதிதாக தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் அம்பை தாலுகாவில் இருந்து வந்த பள்ளக்கால் பொதுக்குடி, ரெங்கசமுத்திரம், அடைச்சாணி, இடைகால் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 11 கிராமங்கள் தென்காசி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு உள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் தங்களது கிராமங்களை அம்பை தாலுகாவில் சேர்க்க கோரியும் இந்த ஊராட்சிகளில் உள்ள 11 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஏற்கனவே நெல்லை, தென்காசி மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள், வெளியூர்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரு நாள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி உதவி கலெக்டர் பழனிக்குமார், தாசில்தார் சண்முகம், ஆலங்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜாகிர்உசேன் ஆகியோர் பள்ளக்கால் பொதுக்குடியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் 11 கிராமங்களை சேர்ந்த மக்கள் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கிராமமக்கள் கலெக்டர் அருண் சுந்தர் தயாளனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
எங்களது கிராமங்கள் அம்பை தாலுகாவில் இருந்து வருகின்றன. சுமார் 20 ஆயிரம் பேர் குடியிருந்து வருகிறோம். அம்பை தாலுகா அலுவலகம் எங்கள் கிராமங்களில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. எங்களது தேவைக்கு அம்பை தாலுகாவிற்கு இருசக்கர வாகனத்தில் எளிதாக சென்று வந்து விடுவோம். ஆனால், தற்போது எங்களது கிராமங்கள் தென்காசி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் சுமார் 35 கிலோ மீட்டர் செல்லும் நிலை உள்ளது. இதனால் நாங்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாக வேண்டி உள்ளது.
எனவே, இதனை மாற்றியமைத்து, மீண்டும் எங்கள் கிராமங்களை நெல்லை மாவட்டம் அம்பை தாலுகாவில் இணைக்க வேண்டும் என கூறி இருந்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்ததை தொடர்ந்து கிராமமக்கள் கலைந்து சென்றனர். தென்காசி கலெக்டர் அலுவலகத்தை 11 கிராமமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story