ரூ.39 கோடி நிலுவை தொகையை வழங்காததை கண்டித்து சர்க்கரை ஆலை பேரவை கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் வெளிநடப்பு


ரூ.39 கோடி நிலுவை தொகையை வழங்காததை கண்டித்து சர்க்கரை ஆலை பேரவை கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 5 Dec 2019 11:00 PM GMT (Updated: 5 Dec 2019 8:04 PM GMT)

பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் வழங்கிய கரும்புக்கு வழங்க வேண்டிய ரூ.39 கோடி நிலுவை தொகையை வழங்காததை கண்டித்து, சர்க்கரை ஆலை ஆண்டு பேரவை கூட்டத்தி லிருந்து கரும்பு விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 42-வது ஆண்டு பேரவை கூட்டம், துறைமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது இதற்கு ஆலையின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ரீட்டா ஹரீ‌‌ஷ் தக்கர் தலைமை தாங்கினார். சர்க்கரை ஆலையின் பொது மேலாளரும், இயக்குனருமான விஜயா, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா, சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி முகமது அஸ்லாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கடந்த 2015-ம்ஆண்டு முதல் 2017 2015-ம்ஆண்டு வரை வழங்க வேண்டிய நிலுவை தொகையான ரூ.39 கோடியை சர்க்கரை ஆலை நிர்வாகம் இதுவரை வழங்காததை கண்டித்து கோ‌‌ஷங்களை எழுப்பி கூட்டத்தை விட்டு வெளி நடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பினர். இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் வழங்கிய கரும்புக்கு வழங்க வேண்டிய ரூ.39 கோடி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

கடனை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்

சர்க்கரை ஆலையில் ஆண்டு முழுவதும் மின் உற்பத்தி செய்ய ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு, தற்காலிக பணியாளர்களை நியமிக்காமல் நிரந்தர பணியாளர்களை உடனே நியமிக்க வேண்டும். அரவை பருவத்தில் மட்டும் மின்உற்பத்தி செய்யும் நிலையை மாற்றி ஆண்டு முழுவதும் மின் உற்பத்தி செய்ய வேண்டும். ஆலையின் வழிவகை கடனை பங்காக மாற்றக்கூடாது. ந‌‌ஷ்டத்தில் இயங்கும் இந்த பொதுத்துறை ஆலையின் கடனை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். அரவை பருவம் தொடங்க சில நாட்கள் இருக்கும் நிலையில் திறமையாக செயல்பட்ட சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகியை திடீரென்று பணியிடமாற்றம் செய்ததை கண்டிக்கிறோம் என்றனர். இதில் அனைத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் பங்கு தாரர்கள் கூட்டமைப்பு சேர்ந்த விவசாயிகளான ராஜாசிதம்பரம், செல்லதுரை, ராஜேந்திரன், ஞானமூர்த்தி, முருகேசன், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் வெளிநடப்பை கைவிட்டு, கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story