அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாநகராட்சி பள்ளிகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியான வண்ணம்


அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாநகராட்சி பள்ளிகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியான வண்ணம்
x
தினத்தந்தி 5 Dec 2019 10:45 PM GMT (Updated: 5 Dec 2019 8:48 PM GMT)

அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாநகராட்சி பள்ளிகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியான வண்ணம் கலந்தாய்வு கூட்டத்தில் ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவு.

திருச்சி,

திருச்சி மாநகராட்சி பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து மாநகராட்சி மைய அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆணையர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 74 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாநகராட்சி பொறியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆணையர் சிவசுப்பிரமணியன் பேசுகையில், “பள்ளி வளாகங்களில் உள்ள குறைகளை கேட்டறிந்து தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். கழிவறை வசதி, குடிநீர் வசதி, சத்துணவு கட்டிடம், உணவு சாப்பிடும் இடம், சுற்றுச்சுவர், வர்ணம் பூசும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

குடிநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி, பள்ளி மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு தேவையான சிறுநீர் கழிவறை, குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை கல்விநிதியின் கீழ் மேற்கொள்ள வேண்டும். மேலும், மாநகராட்சி பள்ளிகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியான வண்ணங்களில் வர்ணம் பூச வேண்டும்” என்றார். மாதந்தோறும் இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. கலந்தாய்வு கூட்டத்தில் செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.



Next Story