போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று புனே வருகை உத்தவ் தாக்கரே வரவேற்கிறார்


போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று புனே வருகை உத்தவ் தாக்கரே வரவேற்கிறார்
x
தினத்தந்தி 6 Dec 2019 12:00 AM GMT (Updated: 5 Dec 2019 10:00 PM GMT)

புனேயில் 3 நாட்கள் நடைபெறும் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று வருகிறார். அவரை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வரவேற்கிறார்.

புனே, 

மத்திய உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கான தேசிய மாநாட்டை நடத்தி வருகிறது.

இன்று தொடங்குகிறது

இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்வது வழக்கம். தொடர்ந்து டெல்லியில் நடைபெற்று வந்த இந்த மாநாடு மோடி பிரதமராக பதவி ஏற்றதில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த மாநாடு குஜராத்தில் உள்ள கெவாடியாவில் ஒற்றுமை சிலைக்கு அருகே நடைபெற்றது.

இந்த ஆண்டிற்கான போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு புனே நகரில் உள்ள பாஷன் பகுதியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.ஐ. எஸ்.இ.ஆர்) வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 8-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

பிரதமர் மோடி வருகை

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இதற்காக இன்று மாலை அவர் புனே விமான நிலையம் வந்து சேருகிறார். பிரதமர் மோடியை, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விமான நிலையம் சென்று வரவேற்கிறார்.

முதல்-மந்திரி பதவி ஏற்ற உத்தவ் தாக்கரே டெல்லி சென்று பிரதமரை இன்னும் சந்திக்கவில்லை. இந்த நிலையில் இன்று அவர் மோடியை சந்திக்க இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உள்நாட்டு பாதுகாப்பு

இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களின் போலீஸ் டி.ஜி.பி.க்கள், மத்திய- மாநில விசாரணை மற்றும் புலனாய்வு அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 180 உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட உள்ளது.

Next Story