நாகர்கோவிலில் தபால் தலை கண்காட்சி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்


நாகர்கோவிலில் தபால் தலை கண்காட்சி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 5 Dec 2019 10:45 PM GMT (Updated: 5 Dec 2019 10:11 PM GMT)

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் தபால் தலை கண்காட்சி நேற்று தொடங்கியது. இதை ஏராளமான மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி தபால் கோட்டம் சார்பில் மாவட்ட அளவிலான தபால்தலை கண்காட்சி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) வரை நடக்கிறது. தபால் தலை சேகரிப்பை ஊக்கப்படுத்தும் விதமாகவும், தபால் தலை சேகரிப்பு பற்றி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் பழமைவாய்ந்த தபால் தலைகள் இடம்பெற்றுள்ளன. மகாத்மா காந்தி உள்ளிட்ட தியாகிகளின் உருவம் அடங்கிய தபால் தலைகள், தேச தலைவர்களின் தபால் தலைகள் என பல்வேறு விதமான தபால் தலைகள் இடம்பெற்றுள்ளன.

தபால் உறை வெளியீடு

அதோடு கண்காட்சியில் உள்ள ஒரு அரங்கில் அமெரிக்க டாலர்கள், இங்கிலாந்து, ஐரோப்பா போன்ற வெளிநாடுகளின் பணம் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இந்திய நாட்டின் பழங்காலத்து நாணயங்கள், அரசர்களின் சின்னம் அச்சிடப்பட்ட நாணயங்கள் மற்றும் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளும் அங்கு வைக்கப்பட்டு உள்ளன.

இந்த கண்காட்சியை தென் மண்டல தபால்துறை இயக்குனர் சோமசுந்தரம் தொடங்கி வைத்தார். பின்னர் 3 சிறப்பு தபால் உறைகளையும் வெளியிட்டார். அதாவது ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, குளச்சல் போர் நினைவு சின்னம் மற்றும் திற்பரப்பு அருவி ஆகிய சிறப்பு தபால் உறைகளை வெளியிட்டார்.

மாணவ-மாணவிகள்

இதைத் தொடர்ந்து வினாடி-வினா போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கண்காட்சியின் முதல் நாளான நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ-மாணவிகள் வந்து விதவிதமான தபால் தலைகளை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். அவற்றை குறிப்பும் எடுத்துக்கொண்டனர். ஏராளமான மாணவ-மாணவிகள் குவிந்ததால் கண்காட்சியில் கூட்டம் அலைமோதியது.

முன்னதாக கண்காட்சியில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு பணியமர்த்தப்பட்டு இருந்தார்கள்.

Next Story