சர்னி ரோடு ரெயில் நிலையத்தில் டி.வி. நடிகையை தாக்கிய வாலிபர் கைது


சர்னி ரோடு ரெயில் நிலையத்தில் டி.வி. நடிகையை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 Dec 2019 5:15 AM IST (Updated: 6 Dec 2019 5:16 AM IST)
t-max-icont-min-icon

சர்னி ரோடு ரெயில் நிலையத்தில் டி.வி. நடிகை மற்றும் அவரது தோழியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை, 

சர்னி ரோடு ரெயில் நிலையத்தில் டி.வி. நடிகை மற்றும் அவரது தோழியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பின்தொடர்ந்த வாலிபர்

மும்பை அந்தேரி, போர் பங்களா பகுதியை சோ்ந்த டி.வி. நடிகை ஹர்சிதா காஷ்யப்(வயது26). இவரது தோழி இஷ் பாலா(27). வெளிநாட்டு வாழ் இந்தியரான இஷ் பாலா, தென் ஆப்பிரிக்காவில் வசித்து வருகிறார். சமீபத்தில் இவர் வேலை விஷயமாக மும்பை வந்திருந்தார். சம்பவத்தன்று ஹா்சிதா காஷ்யப்பும், இஷ் பாலாவும் சர்னிரோட்டில் உள்ள தனியாா் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தனர்.

பின்னர் அவர்கள் மின்சார ரெயில் மூலம் வீடு திரும்ப சர்னி ரோடு ரெயில்நிலையம் வந்தனர். அப்போது, ரெயில்நிலைய டிக்கெட் கவுண்ட்டர் முதல் பிளாட்பாரம் வரை வாலிபர் ஒருவர் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.

இதை கவனித்த டி.வி. நடிகை ஹர்சிதா காஷ்யப், இது குறித்து வாலிபரிடம் கேட்டார். அப்போது அந்த வாலிபர் ‘நான் உங்களை பின்தொடர்ந்து வந்தால், உங்களுக்கு என்ன பிரச்சினை' என திமிராக பேசினார்.

டி.வி. நடிகையை தாக்கினார்

இதையடுத்து 2 பேரும் அந்த வாலிபரை கண்டு கொள்ளாமல் நடந்து சென்றனர். எனினும் அந்த வாலிபர் விடாமல் 2 பேரையும் பின்தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் டி.வி. நடிகை மற்றும் அவரது தோழி அந்த வாலிபரிடம் ‘ஏன் எங்களை பின்தொடர்ந்து வருகிறாய்' என மீண்டும் கேட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த அந்த வாலிபர் டி.வி. நடிகை ஹர்சிதா காஷ்யப் மற்றும் அவரது தோழி இஷ் பாலாவை தாக்கினார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

இந்தநிலையில் அங்கு வந்த ரெயில்வே போலீசார் டி.வி. நடிகை, அவரது தோழியை தாக்கிய வாலிபரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர் ஒர்லி, மாரியப்பா நகரை சேர்ந்த பார் ஊழியர் ஷாருக் சேக்(வயது29) என்பது தெரியவந்தது.

இது குறித்து டி.வி. நடிகை கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார், ஷாருக் சேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story