தொடர் உண்ணாவிரதத்தால் முருகனின் உடல் எடை 20 கிலோ குறைந்தது - 2-வது நாளாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது
வேலூர் மத்திய சிறையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள முருகன், நளினிக்கு நேற்று 2-வது நாளாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. உண்ணாவிரதம் காரணமாக முருகனின் உடல் எடை 20 கிலோ குறைந்துள்ளது.
வேலூர்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் கடந்த 28 வருடங்களுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
முருகனின் அறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதாக அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார். சிறை சலுகைகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் முருகன் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து நளினியும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். கோர்ட்டு உத்தரவின்பேரில் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில் தங்களை கர்நாடகா அல்லது வேறு மாநிலத்தில் உள்ள சிறைக்கு மாற்றவேண்டும் என்று நளினி கோரிக்கைவிடுத்தார். மேலும் தங்களுக்கு விடுதலை கிடைக்காததால் கருணைக்கொலை செய்யக்கோரியும் கடந்த மாதம் 28-ந் தேதி நளினி மனுகொடுத்தார்.
அன்றுமுதல் தொடர் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் 9-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். முருகன் 7-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
தொடர் உண்ணாவிரதம் காரணமாக இருவரின் உடல்நிலையும் மோசமானது. இதனால் அவர்களுடைய உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இருவருக்கும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.
மேலும் அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்படுகிறது. தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதால் 64 கிலோ எடை இருந்த முருகனின் உடல் எடை தற்போது 20 கிலோ குறைந்து, 44 கிலோ இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story