பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாமக்கல்லில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த 77 பேர் கைது


பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாமக்கல்லில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த 77 பேர் கைது
x
தினத்தந்தி 6 Dec 2019 10:30 PM GMT (Updated: 6 Dec 2019 6:33 PM GMT)

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாமக்கல்லில், போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த 77 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல், 

பாபர் மசூதியை இடித்த நபர்களை கைது செய்ய வேண்டும். பாபர் மசூதி தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த நாமக்கல் போலீசாரிடம் அனுமதி கேட்டு அதன் நிர்வாகிகள் கடிதம் கொடுத்தனர். ஆனால் போலீசார் அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர்.

இருப்பினும் நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் போலீசாரின் தடையை மீறி நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அஹதுல்லா தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கைது செய்து தனியார் பள்ளி வாகனத்தில் ஏற்றி திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். இதில் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பாபர் மசூதி இடிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் போலீசார் அனுமதி வழங்கவில்லை. எனவே போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த அக்கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதில் 14 பெண்கள் உள்பட மொத்தம் 50 பேரை போலீசார் கைது செய்தனர். இரு ஆர்ப்பாட்டங்களையும் சேர்த்து மொத்தமாக 77 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story