பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி த.மு.மு.க., எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் -479 பேர் கைது
பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி த.மு.மு.க., எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 479 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மேலப்புலிவார்டுரோடு இப்ராகிம்பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜாபர்அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இப்ராகிம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் கோவை சாதிக்அலி, மாநில செயற்குழு உறுப்பினர் உதுமான்அலி, ம.தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது, பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாபர் மசூதியை இடித்தவர்களை விரைந்து தண்டிக்க வேண்டும். சிறுபான்மை சமுதாயத்தின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.
முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர். ஆனாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அங்கு போலீஸ் துணை கமிஷனர் வேதரத்தினம் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய 216 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் நியாமத்துல்லா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அபுபக்கர்சித்திக், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் பெரியார் சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின்போது, பாபர் மசூதியை திருப்பி கொடுக்க வேண்டும். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 263 பேரை போலீசார் கைது செய்து, மண்டபத்தில் தங்க வைத்தனர். இரு ஆர்ப்பாட்டத்திலும் சேர்த்து மொத்தம் 479 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலையம், விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story