கிண்டியில் ரெயில்வே பெண் ஊழியரை கடத்த முயற்சி: போலீசாக நடித்த 3 பெண்கள் கைது


கிண்டியில் ரெயில்வே பெண் ஊழியரை கடத்த முயற்சி: போலீசாக நடித்த 3 பெண்கள் கைது
x
தினத்தந்தி 7 Dec 2019 5:00 AM IST (Updated: 7 Dec 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

கிண்டியில் ரெயில்வே பெண் ஊழியரை கடத்த முயன்ற வழக்கில் போலீஸ் போல் நடித்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மனைவி சுபாஷினி(வயது 42). மாம்பலம் ரெயில் நிலையத்தில் முன்பதிவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதற்காக கிண்டி ரெயில் நிலையம் வந்த அவர் நடைமேடைக்கு செல்ல முயன்றார்.

2 பெண்களும், ஒரு ஆணும் “உங்களை விசாரிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் அழைத்து வரச்சொன்னார்” எனக்கூறி சுபாஷினியை கடத்த முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுபாஷினி ஓடிச்சென்று கிண்டி ரெயில்வே அலுவலகத்துக்குள் நுழைந்தார். இதை பார்த்த ரெயில்வே போலீசார் மற்றும் அங்கிருந்த ரெயில் பயணிகள் அவர்களை பிடிக்க முயன்றனர். இதையடுத்து 2 பெண்களும், காரில் போலீஸ் உடையில் இருந்த ஒரு பெண்ணும் தப்பிச்சென்று விட்டனர். அவர்களுடன் வந்த ஆண் நபரை மட்டும் போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், வியாசர்பாடியை சேர்ந்த கார் டிரைவர் ஜீவானந்தம்(52) என்பதும், போலீஸ் அதிகாரிக்கு சவாரி செல்லுமாறு பெரம்பூரை சேர்ந்த பாலகுரு என்பவர் கூறியதால் வந்ததாகவும் கூறினார்.

இதையடுத்து பெரம்பூரை சேர்ந்த பாலகுரு என்பவரை பிடித்த ரெயில்வே போலீசார், பிடிபட்ட 2 பேரையும் கிண்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது பாலகுரு அளித்த தகவலின்பேரில் பெரம்பூரைச் சேர்ந்த வதனீ(39) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். போலீசாரிடம் வதனீ அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

எனக்கும், ராயபுரம் ரெயில்வே ஊழியரான கிஷோருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. ஆனால் கிஷோருடன், சுபாஷினிக்கும் தொடர்பு இருக்குமோ? என சந்தேகப்பட்டேன். இதனால் கிஷோர் கைவிட்டுவிடுவாரோ? என கருதினேன்.

எனவே கிஷோருடன் பழகுவதை நிறுத்தும்படி மிரட்டினால் அதன்பிறகு அவருடன் சுபாஷினி பழக மாட்டார் என நினைத்தேன். இதற்காக எனக்கு தெரிந்த ஆவடியை சேர்ந்த தமிழ்ச்செல்வி(38), வில்லிவாக்கத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி(37) ஆகியோருடன் சேர்ந்து போலீஸ் போல் நடித்து சுபாஷினியை மிரட்ட திட்டம்போட்டேன்.

அதன்படி முத்துலட்சுமி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்க வைக்க போலீஸ் உடைகளை வாங்கினோம். பின்னர் திருடியை பிடிக்க வேண்டி இருப்பதாக கூறி பாலகுரு மூலம் ஜீவானந்தத்தின் காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு கிண்டி வந்து சுபாஷினியை காரில் கடத்திச்சென்று மிரட்ட முயன்றோம்.

ரெயில்வே போலீசார் வந்துவிட்டதால் நாங்கள் தப்பித்து விட்டோம். போலீசாரிடம் கார் டிரைவர் சிக்கிக்கொண்டதால், நாங்களும் மாட்டிக்கொண்டோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து வதனீ, முத்துலட்சுமி, தமிழ்ச்செல்வி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து போலீஸ் உடைகளையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கார் டிரைவர் ஜீவானந்தம், பாலகுரு ஆகியோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story