ரூ.70 ஆயிரம் கோடி நீர்ப்பாசன ஊழல் வழக்கில் அஜித்பவார் குற்றமற்றவர் ஐகோர்ட்டில் போலீசார் பிரமாண பத்திரம் தாக்கல்
ரூ.70 ஆயிரம் கோடி நீர்ப்பாசன ஊழல் வழக்குகளில் அஜித்பவார் குற்றமற்றவர் என்று நாக்பூர் ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளனர்.
மும்பை,
ரூ.70 ஆயிரம் கோடி நீர்ப்பாசன ஊழல் வழக்குகளில் அஜித்பவார் குற்றமற்றவர் என்று நாக்பூர் ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளனர்.
நீர்ப்பாசன ஊழல் வழக்கு
மராட்டியத்தில் கடந்த 1999 முதல் 2009 வரையிலான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பதவி வகித்தவர் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார். விதர்பா நீர்ப்பாசன மேம்பாட்டு கழகத்தின் தலைவராகவும் இருந்தார். அந்த காலக்கட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 45 நீர்ப்பாசன திட்டங்களுக்கான 2,654 டெண்டர்கள் விட்டதில் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்து உள்ளதாக மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளையில் 2 வழக்குகள் தொடரப்பட்டன.
இது தொடர்பாக விசாரணை நடத்த மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்து வந்தனர்.
9 வழக்குகள் முடித்து வைப்பு
இதற்கிடையே நீரப்பாசன முறைகேடு வழக்கில் அஜித்பவாரின் பங்கு என்ன என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்த சூழலில் மராட்டியத்தில் சட்டசபை தேர்தலுக்கு பிறகு நிலவிய அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் பாரதீய ஜனதா அமைத்த திடீர் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சிக்கு திரும்பியதன் காரணமாக பெரும்பான்மை இல்லாததால் 4 நாட்களில் அந்த அரசாங்கம் கவிழ்ந்தது.
தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அந்த மிக குறுகிய கால அரசாங்கம் பொறுப்பேற்றதும், அஜித்பவாருக்கு எதிரான நீர்ப்பாசன ஊழல் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகின. ஆனால் 9 நீர்ப்பாசன திட்டங்களில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்குகள் முடிக்கப்பட்டதாகவும், அவை அஜித்பவாருக்கு தொடர்புடைய வழக்குகள் அல்ல என்றும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்து இருந்தனர்.
பிரமாண பத்திரம் தாக்கல்
இந்த நிலையில், நீர்ப்பாசன திட்டங்களில் நடைபெற்ற ஊழலில் அஜித் பவார் குற்றமற்றவர் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “நீர்ப்பாசன திட்டப்பணிகளை செய்த காண்டிராக்டர்கள், என்ஜினீயர்கள், மண்டல கணக்காளர்கள் தான் தவறு செய்து இருக்கிறார்கள். விதர்பா நீர்ப்பாசன மேம்பாட்டு கழகத்தின் தலைவராக அஜித் பவார் இருந்திருந்தாலும், அதிகாரிகள் செய்த தவறுக்கு அவர் பொறுப்பேற்க முடியாது. அவரது தரப்பில், சட்ட ரீதியாக எந்த தவறும் இல்லை. எனவே அஜித்பவாருக்கு எதிரான பொதுநலன் மனுக்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டு உள்ளது.
கடந்த மாதம் 28-ந் தேதி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் முன்னணி அரசு பதவி ஏற்ற நிலையில், அதற்கு ஒரு நாள் முன்பாகவே அதாவது நவம்பர் 27-ந் தேதி இந்த பிரமாணப்பத்திரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story