விக்கிரவாண்டி அருகே, ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி


விக்கிரவாண்டி அருகே, ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 7 Dec 2019 4:15 AM IST (Updated: 7 Dec 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே நண்பர்களுடன் குளிக்கச்சென்ற கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

விக்கிரவாண்டி, 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பொம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் ஜெயமூர்த்தி (வயது 18). விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று மதியம் அதேஊரை சேர்ந்த நண்பர்கள் சிலருடன் குளிப்பதற்காக இளையாண்டிபட்டு ஆற்றுக்கு சென்றார். பின்னர் அவர் நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜெயமூர்த்தி எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் இதுபற்றி ஜெயமூர்த்தியின் குடும்பத்தினருக்கும், விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இளைஞர்கள் உதவியுடன் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவரை தேடினர். சுமார் 4 மணி நேர தேடுதலுக்குபிறகு ஜெயமூர்த்தி பிணமாக மீட்கப்பட்டார். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜெயமூர்த்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story