அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்


அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2019 3:45 AM IST (Updated: 7 Dec 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

அனுப்பர்பாளையம், 

திருப்பூர் மாநகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட (பழைய வார்டு 20) அவினாசிநகர், ஜெயலட்சுமிநகர், திருமுருகன்நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலை, சாக்கடை மற்றும் சுகாதார வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடக்கு ஒன்றிய செயலாளர் அருள் தலைமையில் பிச்சம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் நேற்று காலை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திரண்டு வந்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உதவி பொறியாளர் ஆறுமுகத்தை சந்தித்து அந்த மனுவை கொடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட உதவி பொறியாளர் ஆறுமுகம், சுகாதார அதிகாரிகள் உடனடியாக பொதுமக்களுடன் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் முதற்கட்டமாக குப்பைகளை அகற்றுவது, குண்டும், குழியுமாக இருந்த சாலைகளில் மண்ணை கொட்டி சரிப்படுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

இதனால் சமரசம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய துணை தலைவர் செல்வக்குமார், கிளை நிர்வாகிகள் கார்த்திக், பிரபாகரன், சுந்தர், சுரேஷ், சேவியர் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story