பா.ஜனதா ஆட்சியை கலைக்கும் அஸ்திவாரம் வெங்காய விலை உயர்வு - திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி


பா.ஜனதா ஆட்சியை கலைக்கும் அஸ்திவாரம் வெங்காய விலை உயர்வு - திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 6 Dec 2019 10:45 PM GMT (Updated: 6 Dec 2019 10:42 PM GMT)

பா.ஜனதா ஆட்சியை கலைக்கும் அஸ்திவாரம் வெங்காய விலை உயர்வு என்று திண்டுக்கல்லில் திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. கலந்து கொண்டு, அம்பேத்கர் உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய பா.ஜனதா அரசு ஜனநாயகத்தை படுகொலை செய்து வருகிறது. ஜம்மு-கா‌‌ஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து, முக்கிய தலைவர்களை மாதக்கணக்கில் வீட்டு சிறையில் வைத்துள்ளது. மேலும் பல மாநிலங்களில் கட்சிகளை உடைத்து, எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா இழுக்கிறது. பணம், பதவி ஆசையை காட்டி ஆட்சியை பிடிக்கிறது.

அதே பாணியில் மராட்டியத்தில் ஆட்சியை பிடிக்க நினைத்த பா.ஜனதாவுக்கு, எம்.எல்.ஏ.க்கள் தக்க பாடம் புகட்டினர். இனிமேலாவது பா.ஜனதா ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும். இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதேபோல் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 30 கோடி பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி உலகம் சுற்றும் வாலிபனாக வெளிநாடுகளுக்கு சென்று சுற்றி வருகிறார்.

வெங்காயம் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு பா.ஜனதா ஆட்சியை கலைக்கும் அஸ்திவாரம் ஆகும். நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலாசீதாராமன் பதில் அளிக்கையில், நான் வெங்காயம் சாப்பிடுவது இல்லை என்று கூறுகிறார். பா.ஜனதா ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது. குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கான ஒதுக்கீடு சரியாக இல்லை என்பதால் தான், தி.மு.க. கோர்ட்டுக்கு சென்றது. இதற்காக தி.மு.க.வை குறை கூறமுடியாது. அரசு தவறு செய்தால், எதிர்க்கட்சியினர் கோர்ட்டை நாடுவது இயல்பு. உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதே, காங்கிரஸ் கட்சியின் விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவர்கள் சொக்கலிங்கம், அப்துல்கனிராஜா, சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story