இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை எதிரொலி 4 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மதுபானம் விற்க தடை போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் உத்தரவு
4 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மதுபானம் விற்பனை செய்ய தடை விதித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் உத்தரவிட்டு உள்ளார்.
பெங்களூரு,
சட்டசபை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை(திங்கட்கிழமை) நடைபெறுவதையொட்டி 4 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மதுபானம் விற்பனை செய்ய தடை விதித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் உத்தரவிட்டு உள்ளார்.
நாளை வாக்கு எண்ணிக்கை
பெங்களூருவில் உள்ள சிவாஜிநகர், கே.ஆர்.புரம், மகாலட்சுமி லே-அவுட், யஷ்வந்தபுரம், பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை உள்பட மொத்தம் 15 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 5-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை(திங்கட்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன.
அதன்படி சிவாஜிநகர் சட்டசபை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஐகிரவுண்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வசந்தநகரில் உள்ள மவுண்ட் கார்மல் பெண்கள் பி.யூ. கல்லூரியில் வைத்தும், கே.ஆர்.புரம் மற்றும் மகாலட்சுமி லே-அவுட் சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கப்பன்பார்க் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட விட்டல் மல்லையா ரோட்டில் உள்ள செயின்ட் ஜோசப் இந்தியன் உயர் நிலைப்பள்ளியில் வைத்தும் எண்ணப்படுகிறது. யஷ்வந்தபுரம் சட்டசபை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை கெங்கேரி போலீஸ் எல்லைக்குஉட்பட்ட மைசூரு ரோட்டில் உள்ள ஆர்.வி.என்ஜினீயரிங் கல்லூரியில் வைத்தும், ஒசக்கோட்டை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தேவனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உள்ள ஆகாஷ் இன்டர்நேஷனல் பள்ளியிலும் நடக்கிறது.
மதுபானம் விற்க தடை
வாக்கு எண்ணிக்கையை அமைதியாக நடத்தி முடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் நாளை(திங்கட்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை பெங்களூருவில் உள்ள ஐகிரவுண்டு, கப்பன்பார்க், கெங்கேரி மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் உள்ள தேவனஹள்ளி ஆகிய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுபானம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மேற்கண்ட தகவல் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story