இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படுமா? மந்திரி சோமண்ணா பதில்
இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படுமா என்பதற்கு மந்திரி சோமண்ணா பதில் அளித்து உள்ளார்.
பெங்களூரு,
இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படுமா என்பதற்கு மந்திரி சோமண்ணா பதில் அளித்து உள்ளார்.
எடியூரப்பாவுடன் சந்திப்பு
பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவின் வீட்டுக்கு நேற்று காலையில் மந்திரி சோமண்ணா சென்றார். பின்னர் அவர், எடியூரப்பாவை சந்தித்து பேசினார். அப்போது இடைத்தேர்தல் முடிவுகள் குறித்தும், 9 முதல் 12 தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகள் வெளியாகி இருப்பது பற்றியும் எடியூரப்பாவும், சோமண்ணாவும் பேசிக் கொண்டதாக தெரிகிறது.
பின்னர் மந்திரி சோமண்ணா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
12 தொகுதிகளில் வெற்றி
இடைத்தேர்தல் நடந்த 15 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டேன். அந்த சந்தர்ப்பத்தில் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை நன்கு அறிந்து கொண்டேன். மக்கள் அனைவரும் மாநிலத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் இன்னும் 3½ ஆண்டுகள் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக பா.ஜனதா கட்சியை ஆதரித்துள்ளனர். இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. எனது 40 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் எத்தனையோ இடைத்தேர்தல்களை சந்தித்துள்ளேன். அதன்மூலம் சொல்கிறேன் 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும். 15 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றால் கூட ஆச்சரியம் இல்லை.
இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி மக்களை திசை திருப்ப முயன்றன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பவில்லை. இடைத்தேர்தலில் பா.ஜனதாவை மக்கள் ஆதரித்துள்ளனர். இடைத்தேர்தலில் போட்டியிட்ட தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தோல்வி அடைந்தால், அவர்களுக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஈசுவரப்பாவும் ஒருவர். அவர் கூறும் கருத்துகளுக்கு, நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.
இவ்வாறு மந்திரி சோமண்ணா கூறினார்.
தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள், இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் மந்திரி பதவி வழங்கப்படாது என்று பா.ஜனதா மூத்த தலைவரும், மந்திரியுமான கே.எஸ்.ஈசுவரப்பா கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் மந்திரி சோமண்ணா கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story