ஐதராபாத் பெண் டாக்டர் கற்பழிப்பு சம்பவம் எதிரொலி: கல்லூரி மாணவிகளுக்கு ‘காவலன் செயலி' குறித்து விழிப்புணர்வு


ஐதராபாத் பெண் டாக்டர் கற்பழிப்பு சம்பவம் எதிரொலி: கல்லூரி மாணவிகளுக்கு ‘காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 7 Dec 2019 11:00 PM GMT (Updated: 7 Dec 2019 6:48 PM GMT)

ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் எதிரொலியாக, கரூர் கல்லூரி மாணவிகளுக்கு ‘காவலன் செயலி’குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

க.பரமத்தி,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், 4 பேரை போலீஸ் என்கவுண்ட்டர் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த வகையில் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் காவல்துறை மூலம் அமலில் உள்ள காவலன் கைப்பேசி செயலியை பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் அதிகளவில் வேலை செய்யும் நிறுவனம், முதியோர், மாற்றத்திறனாளிகள் பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்பேரில் கரூர் மாவட்டம் க.பரமத்தி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காருடையாம்பாளையம் வி.எஸ்.பி. பொறியியல் கல்லூரியில், பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யும் “காவலன் கைப்பேசி செயலியின்’’ பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தலைமை தாங்கி பேசுகையில், தற்போதை நாகரிக உலகில் பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். எனவே அந்த போனில் பிளே ஸ்டோரில் சென்று காவலன் கைப்பேசி செயலி என பதிவிட்டு அதனை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

போலீஸ் கிளப் உருவாக்கம்

எதாவது அசவுகரியமான சூழல் ஏற்படுகிற போது இந்த செயலியை ஆன் செய்து விட வேண்டும். அப்போது இது நேரடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அந்த சூழலின் உரையாடல் தெரிய வரும். ஜி.பி.எஸ். கருவி மூலம் அந்த இடம் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிய வரும். இதையடுத்து உடனே அந்த இடத்திற்கு அருகில் உள்ள காவல்துறையினர் வந்து பாதுகாப்பு நடவடிக்கையினை கையாளுவார்கள். எனவே இதனை கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் பயன்படுத்திட முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் க.பரமத்தி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் கிருபாசங்கர், துணை முதல்வர் நிர்மல் கண்ணன், கல்லூரி டீன் கவிதா உள்பட பேராசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியின்போது, கல்லூரியில் 15 இளைஞர்களை கொண்ட போலீஸ் கிளப் உருவாக்கப்பட்டது.

Next Story