சாலைகளில் கூட்டமாக செல்ல கூடாது மோட்டார் வாகன ஆய்வாளர் பேச்சு


சாலைகளில் கூட்டமாக செல்ல கூடாது மோட்டார் வாகன ஆய்வாளர் பேச்சு
x
தினத்தந்தி 7 Dec 2019 10:30 PM GMT (Updated: 7 Dec 2019 7:13 PM GMT)

சாலைகளில் கூட்டமாக செல்ல கூடாது என்று மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடி,

தமிழ்நாடு அரசு போக்கு வரத்து துறை மன்னார்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் மற்றும் தேசிய மேல்நிலைப்பள்ளி சாலை பாதுகாப்பு மன்றம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் பள்ளியின் சாரதி கலை அரங்கில் நடந்தது. முகாமிற்கு தலைமை ஆசிரியர் ராதாகிரு‌‌ஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளியின் சாலை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா வரவேற்றார். இதில் மன்னார்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. எனவே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்குவது, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது ஆகியவைகளால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

சாலை விதிகள்

சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். மாணவர்கள் பஸ்களில் செல்லும்போது படிகளில் நின்று கொண்டோ, தொங்கி கொண்டோ பயணிக்க கூடாது. சாலைகளில் கூட்டமாக செல்ல கூடாது. இது போன்ற விழிப்புணர்வு கருத்துக்களை மாணவர்கள் பின்பற்றுதல் மட்டுமின்றி பெற்றோர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும் எடுத்து சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சாலை பாதுகாப்பு தொடர்பான வீடியோ படக்காட்சிகள் திரையிட்டு காண்பிக்கப் பட்டன. முகாமில் சாலை பாதுகாப்பு மன்றம், தேசிய மாணவர் படை, தேசிய பசுமை படை, நாட்டு நலப்பணித்திட்டம் ஆகிய அமைப்புகளை சார்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் தேசிய மாணவர் படை அலுவலர் திவாகர் நன்றி கூறினார். தேசிய பசுமை படை அலுவலர் செல்வராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Next Story