நாகையில் பலத்த மழை: குடியிருப்பு பகுதியில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து தேங்கி நின்றதால் துர்நாற்றம்


நாகையில் பலத்த மழை: குடியிருப்பு பகுதியில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து தேங்கி நின்றதால் துர்நாற்றம்
x
தினத்தந்தி 7 Dec 2019 10:30 PM GMT (Updated: 7 Dec 2019 7:17 PM GMT)

நாகையில் பலத்த மழை பெய்ததால் குடியிருப்பு பகுதியில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து தேங்கி நின்று துர்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகையில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த மாதம் கன மழை பெய்தது. இதைத்தொடர்ந்து அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்தது. மேலும் கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் வெயில் சுட்டெரித்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இரவில் அவ்வப்போது மழை பெய்தது. நேற்று காலை 8 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழை காலை 11 மணி வரை பெய்தது. இதனால் நாகை நகர் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

துர்நாற்றம்

மேலும் அரியபத்திரபிள்ளைத்தெருவில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. மேலும் கால்வாயில் இருந்து வெளியேறிய கழிவுநீருடன், மழைநீர் கலந்து தேங்கி நின்றதால் துர்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிப்பட்டனர்.

வாய்க்கால்களில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலை நீடித்தால் நெற்பயிர்கள் அழுகும் நிலை உருவாகும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

நாகூர்

இதேபோல நாகூர், முட்டம், நெத்தி, மேலவாஞ்சூர், அத்திப்புலியூர், குருக்கத்தி, கீவளூர், தேவூர், வலிவலம், விடங்கலூர்,கோகூர், ஆனைமங்கலம், கடம்பங்குடி,வெங்கிடங்கால், திருகண்ணங்குடி, ஆழியூர், சிக்கல், ஓரத்தூர், ஆவராணி, வேளாங்கண்ணி, சிக்கல், திருப்பூண்டி, மேலப்பிடாகை, கீழையூர், திட்டச்சேரி, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. 

Next Story