மாவட்ட செய்திகள்

3 வயது குழந்தை சாவில் திடீர் திருப்பம்: தாயின் 2-வது கணவர் எட்டி உதைத்து கொன்றது அம்பலம் + "||" + 3 year old child death Mother 2nd husband Killing

3 வயது குழந்தை சாவில் திடீர் திருப்பம்: தாயின் 2-வது கணவர் எட்டி உதைத்து கொன்றது அம்பலம்

3 வயது குழந்தை சாவில் திடீர் திருப்பம்: தாயின் 2-வது கணவர் எட்டி உதைத்து கொன்றது அம்பலம்
3 வயது குழந்தை சாவில் திடீர் திருப்பமாக தாயின் 2-வது கணவர் காலால் எட்டி உதைத்ததில் பலியானது தெரிந்தது. இதையடுத்து கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் இந்திரா நகர் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் கங்கா(வயது 26). கணவரை இழந்த இவர், தனது 3 வயது மகன் அருணுடன் வசித்து வந்தார். இதற்கிடையில் தன்னுடன் கட்டிட வேலை செய்துவந்த கொத்தனார் வெங்கடேசன் (35) என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார்.


கங்கா, தனது மகன் அருணை, வெங்கடேசனிடம் ஒப்படைத்துவிட்டு தனது சொந்த ஊரான கேரளாவுக்கு அவசர வேலையாக சென்றுவிட்டார். அப்போது, அருண் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கங்காவுக்கு, வெங்கடேசன் போனில் தகவல் கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கங்கா, உடனடியாக சென்னை வந்தார். ஆனால் அதற்குள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அருண் பலியானான். தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், தனது 2-வது கணவர் வெங்கடேசன் தாக்கியதில் அவன் இறந்து இருக்கலாம் என்றும் பள்ளிக்கரணை போலீசில் கங்கா புகார் செய்தார்.

இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் அழகு, சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார், தலைமறைவான வெங்கடேசனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் அவர், கள்ளக்குறிச்சியில் பதுங்கி இருப்பது தெரிந்தது. உடனடியாக போலீசார் கள்ளக்குறிச்சி சென்று வெங்கடேசனை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.

போலீசாரிடம் வெங்கடேசன் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

கங்காவை 2-வது திருமணம் செய்து கொண்டு, அவரது முதல் கணவருக்கு பிறந்த குழந்தை அருணுடன் வசித்து வந்தேன். ஆனால் வேறு ஒருவருக்கு பிறந்த குழந்தை எங்களுடன் வளர்ந்து வருவது எனக்கு இடையூறாக இருந்தது. இதனால் அருண் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது.

கங்கா ஊருக்கு சென்றபோது நான் குடிபோதையில் வீட்டில் இருந்தேன். அப்போது வீட்டில் இருந்த அருண் திடீரென மாயமானான். அவனை தேடியபோது பக்கத்து வீட்டுக்கு சென்று சாப்பிட்டு கொண்டு இருந்தான். அந்த வீட்டில் அவன் சாப்பிட்டது எனக்கு பிடிக்கவில்லை. வலுக்கட்டாயமாக அவனை வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

அவன் மீது ஆத்திரம் அடங்காமல் அடித்ததுடன், எனது காலால் அருணை எட்டி உதைத்தேன். இதில் கீழே விழுந்த அருணின் தலை, தரையில் மோதியது. படுகாயம் அடைந்த அவன் மயங்கி விழுந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த நான், உடனடியாக அருணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தேன்.

ஆனால் அங்கு டாக்டர்கள் என்னிடம் பல்வேறு கேள்விகளை கேட்டதால் பயந்து போய் அங்கிருந்து தப்பி கள்ளக்குறிச்சிக்கு சென்று விட்டேன். கங்காவுக்கு போன் செய்து குழந்தை ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாக தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.