நாகர்கோவில் கோட்டாட்சியர் அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட முயற்சி


நாகர்கோவில் கோட்டாட்சியர் அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 7 Dec 2019 10:45 PM GMT (Updated: 7 Dec 2019 7:43 PM GMT)

நாகர்கோவில் கோட்டாட்சியர் அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.

நாகர்கோவில்,

கன்னியாகுமரியில் வெளிமாநில அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தம் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் காட்சி கோபுரம் அருகே அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி வாகன நிறுத்தம் கன்னியாகுமரி சிலுவை நகர் சன்செட் பாயிண்ட் அருகே நேற்று திடீரென மாற்றியதாக கூறப்படுகிறது.

இந்த வாகன நிறுத்த மாற்றத்துக்கு சீசன் கடைகளை ஏலம் எடுத்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மாற்றத்தால் 230 சீசன் கடைகளை ஏலம் எடுத்துள்ள தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே பழைய இடத்திலேயே வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று கோரி வியாபாரிகள் அனைவரும் நேற்று மதியம் நாகர்கோவிலுக்கு வந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

இதனை அறிந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்தபடியே கோட்டாட்சியருக்கு, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வாகன நிறுத்தம் மாற்றம் குறித்தும், அதனால் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். அதற்கு அவர், நான் இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக தெரிகிறது. அதன்பிறகு வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முன்னதாக சீசன் கடை வியாபாரிகள் கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.

Next Story