விழுப்புரம் அருகே, பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை - கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு
விழுப்புரம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக அவரது கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரத்தை அடுத்த வளவனூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் திருப்புகழ்வாசன் (வயது 37). இவர் புதுச்சேரி மாநிலம் திருவண்டார்கோவில் பகுதியில் மருந்து கம்பெனி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜெயவேணி (28). இவர்களுக்கு கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. யாழினி (1½) என்ற குழந்தை உள்ளது.
இந்நிலையில் ஜெயவேணியின் திருமணத்தின்போது அவரது பெற்றோர் 40 பவுன் நகை, கார் ஆகியவற்றை மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
இந்த சூழலில் மேலும் 10 பவுன் நகை வரதட்சணையாக கேட்டு அவரது கணவர் திருப்புகழ்வாசன், மாமனார் பலராமன், மாமியார் சாந்தா, உறவினர்கள் தொல்காப்பியன், அவரது மனைவி ராஜலட்சுமி, வெங்கடேசன் மனைவி திருமகள், குமார் மனைவி கோதை ஆகியோர் சேர்ந்து ஜெயவேணியை வீட்டில் அடைத்து வைத்து அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இதை கேள்விப்பட்டதும் ஜெயவேணியின் தாய் விஜயலட்சுமி, தந்தை தனசேகர் ஆகியோர் சென்று நியாயம் கேட்டதற்கு அவர்கள் இருவரையும் திருப்புகழ்வாசன் உள்பட 7 பேரும் சேர்ந்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெயவேணி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் திருப்புகழ்வாசன் உள்பட 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story