உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கதவை உடைத்து கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கதவை உடைத்து கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Dec 2019 4:00 AM IST (Updated: 8 Dec 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை தென்றல் நகரை சேர்ந்தவர் அரிகிரு‌‌ஷ்ணன். இவர் சேலம் ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவருடைய வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த நகை, பணம், டி.வி. உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது. இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அரிகிரு‌‌ஷ்ணன் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம், எலக்ட்ரானிக் பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதேபோல் அருகில் இருந்த ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் ராஜராஜன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த 5 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களையும், ஓய்வுபெற்ற சார்பதிவாளரான சேகர் என்பவரது வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த பீரோவை திறந்து ரூ.1 லட்சம் ரொக்கத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

இது தவிர மர்மநபர்கள் சாமிதுரை என்பவரது வீட்டில் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் மர்மநபர்கள் அங்கு கொள்ளையடிக்காமல் தப்பிச்சென்றதும் தெரிந்தது. தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீடுகளில் இருந்து மோப்பம் பிடித்தபடி சென்று உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் நின்றது. ஆனால் யாரையும் கவ்விபிடிக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story