ராஜபாளையத்தில் தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி


ராஜபாளையத்தில் தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி
x
தினத்தந்தி 8 Dec 2019 4:15 AM IST (Updated: 8 Dec 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.

ராஜபாளையம், 

ராஜபாளையம் சின்னசுரைக்காய்பட்டி தெருவை சேர்ந்தவர் வைகுண்டம் (வயது 54). இவரது மகள் முத்துமாரி(19). ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது விடுமுறை என்பதால் அவர் வீட்டில் இருந்துள்ளார். இந்தநிலையில் வைகுண்டம் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி வெளியே சென்று விட்டார். இதனால் கல்லூரி மாணவி முத்துமாரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்தநிலையில் மாலையில் வைகுண்டம் வீடு திரும்பியபோது மகளை காணவில்லை. வீடு முழுவதும் தேடிப்பார்த்தும் பலன் இல்லை. அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்போது வீட்டின் பின்புறம் உள்ள தரைமட்ட தொட்டியின் மூடி திறந்து கிடந்தது. இதனால் அவர் அந்த தொட்டிக்குள் எட்டிப்பார்த்தார். அப்போது, முத்துமாரி தண்ணீரில் மூழ்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் பதறிய அவர் உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முத்துமாரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் முத்துமாரி ஈடுபட்டுள்ளார். இதற்காக வீட்டின் பின்புறம் உள்ள மின்மோட்டார் சுவிட்சை போட சென்றுள்ளார். அப்போது தடுமாறி அருகில் திறந்து இருந்த தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்ததும் தெரியவந்தது.

கல்லூரி மாணவி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story