தொடர் மழையால் நிரம்பி வரும் கண்மாய்கள் - பொதுமக்கள் மகிழ்ச்சி


தொடர் மழையால் நிரம்பி வரும் கண்மாய்கள் - பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 7 Dec 2019 10:00 PM GMT (Updated: 7 Dec 2019 7:57 PM GMT)

திருவாடானை தாலுகாவில் தொடர் மழையால் கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொண்டி,

திருவாடானை தாலுகாவில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் அதிகஅளவில் பாசன வசதி கொண்ட 88 கண்மாய்கள் உள்ளன. தற்போது பெய்த மழையினால் இந்த தாலுகாவில் உள்ள கோவணி, நம்புதாளை, கள்ளவழியேந்தல், கீழ்க்குடி, விசும்பூர், மேலனை, ஊரணிக்கோட்டை, சோழகன்பேட்டை, எட்டிசேரி, ஓரியூர், புதுவயல், கட்டவிளாகம், தனியன்பீர், எஸ்.பி.பட்டினம் உள்பட 13-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்கள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதேபோல என்.எம்.மங்கலம், சிறுகம்பையூர், ஓரியூர் கண்மாய்கள் 90 சதவீதம் நிரம்பியுள்ளன. தற்போது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் இருந்து மணிமுத்தாற்றில் வரும் உபரிநீரும், ஆண்டாவூருணி அருகே உள்ள கிடங்கூர் அணைக்கட்டு வழியாக வரும் தண்ணீரும் இப்பகுதிக்கு வருவதால் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் இருந்து வரும் உபரிநீர் பாம்பாற்றின் வழியாக அதிகஅளவில் வந்ததால் எஸ்.பி. பட்டினம், சோழகன்பேட்டை, எட்டிசேரி போன்ற கண்மாய்கள் நிரம்பியுள்ளன. மேலும் இப்பகுதியில் உள்ள கண்மாய்களில் 57-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் 75 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தண்ணீர் நிறைந்துள்ளது.

மழை தொடரும் பட்சத்தில் அனைத்து கண்மாய்களும் நிரம்பிவிடும். இந்த கண்மாய்களை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் முத்தமிழ் அரசன் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். திருவாடானை தாலுகாவில் கண்மாய்கள் நிரம்பி வருவதையொட்டி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story