நாகர்கோவிலில் படைவீரர் கொடிநாள் நிதி வசூல் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்


நாகர்கோவிலில் படைவீரர் கொடிநாள் நிதி வசூல் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 Dec 2019 10:30 PM GMT (Updated: 7 Dec 2019 7:59 PM GMT)

நாகர்கோவிலில் படைவீரர் கொடிநாள் நிதி வசூலை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ந் தேதி அன்று இந்தியா முழுவதும் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளில் முன்னாள் படைவீரர்கள் ஆற்றிய தொண்டுகளை அரசு நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறது.

கொடிநாளில் திரட்டப்படும் நிதியானது போர்க்களத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் மனைவி, ஊனமுற்ற படை வீரர்கள், முன்னாள் படை வீரர்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

இந்த ஆண்டுக்கான கொடிநாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதை யொட்டி குமரி மாவட்ட கலெக்டரும், மாவட்ட முப்படை வீரர் வாரியத்தலைவருமான பிரசாந்த் வடநேரே தனது முகாம் அலுவலகத்தில் கொடிநாள் உண்டியல் நிதி வசூலை தொடங்கி வைத்தார். மேலும் அவர் பொதுமக்கள் அனைவரும் கொடிநாள் நிதி உதவியை வாரி வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் ராஜேந்திரன், அலுவலக பணியாளர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

ஆட்டோ டிரைவர் அர்ப்பணிப்பு

கொடிநாளையொட்டி நாகர்கோவிலைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபிநாத் (வயது 40) என்பவர் ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும், ராணுவ வீரர்களின் தன்னலமற்ற பணியை பாராட்டும் விதமாகவும் நேற்று நாள் முழுவதும் தனது ஆட்டோவில் சவாரிக்கு வந்தவர்கள் கொடுத்த கட்டணத்தை கொடிநாள் நிதிக்கு அர்ப்பணித்தார்.

இதற்காக அவர் தன்னுடைய ஆட்டோவில் பேனர் கட்டியிருந்தார். அதில் "இன்று என் ஆட்டோவில் உங்கள் பயணச்செலவு இந்திய ராணுவத்துக்கு, உண்மையான கதாநாயகர்களுக்கு வீரவணக்கம்" என்ற வாசகத்துடன் ராணுவ வீரர்கள் தேசியக்கொடியுடன் அணிவகுக்கும் படமும் அச்சிடப்பட்டு இருந்தது.

Next Story