கெங்கவல்லி அருகே குடிசையில் தீ: 20 பவுன் நகை, ரூ.12 லட்சம் ரொக்கம் எரிந்து நாசம்


கெங்கவல்லி அருகே குடிசையில் தீ: 20 பவுன் நகை, ரூ.12 லட்சம் ரொக்கம் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 7 Dec 2019 11:00 PM GMT (Updated: 7 Dec 2019 8:51 PM GMT)

கெங்கவல்லி அருகே குடிசையில் ஏற்பட்ட தீயில் 20 பவுன் நகை, ரூ.12 லட்சம் ரொக்கம் எரிந்து நாசமானது.

கெங்கவல்லி,

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர் ஊராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட பெரிய கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55), விவசாயி. இவர் தனது தோட்டத்தில் குடிசை அமைத்து குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மேலும் செல்வம், தனது தோட்டத்தில் உள்ள வாழை மரங்களில் இருந்து இலைகளை அறுத்து, ஆத்தூர் உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு, தனது குடிசையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு தோட்டத்துக்கு வாழை இலைகளை அறுப்பதற்கு சென்றார். இவரது மனைவி ரத்தினம் கோவிலுக்கு சென்றுவிட்டார். மகனும் வேலைக்கு சென்றதால், குடிசையில் யாரும் இல்லை.

20 பவுன் நகை

இதனிைடயே மதியம் 1½ மணிக்கு திடீரென்று, செல்வத்தின் குடிசையில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. மேலும் குடிசை தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் குடிசையில் இருந்த 20 பவுன் நகை, ரூ.12 லட்சம் ரொக்கம், ½ கிலோ வெள்ளி ஆகியவை மட்டுமின்றி அங்கிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இது குறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். குடிசை தீப்பிடித்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. எனினும் குடிசையில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் தீ பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடிசை தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story