நாட்டறம்பள்ளி அருகே, விபத்தில் சிக்கிய காரில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - டிரைவர் படுகாயம்
நாட்டறம்பள்ளி அருகே விபத்தில் சிக்கிய காரில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளி,
நாட்டறம்பள்ளி, தாமலேரிமுத்தூர், பச்சூர், சோமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நாட்டறம்பள்ளி வருவாய்த் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தாமலேரிமுத்தூர் பகுதியில் இருந்து காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேலூர் உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் அந்த காரை பின்தொடர்ந்து மற்றொரு காரில் சென்றனர். அதிகாரிகள் துரத்தி வருவதை கண்டதும் ரேஷன் அரிசியை கடத்தி சென்ற தாமலேரிமுத்தூரை சேர்ந்த டிரைவர் அண்ணாதுரை (வயது 50) காரை வேகமாக ஓட்டினார்.
நாட்டறம்பள்ளி - குப்பம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, ரேஷன் அரிசியை கடத்தி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் அண்ணாதுரைக்கு படுகாயம் ஏற்பட்டது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நாட்டறம்பள்ளி போலீசார் படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு, சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீசார் அந்த காரை சோதனை செய்த போது, அதில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி செல்வதற்காக 27 சிறு, சிறு மூட்டைகளில் சுமார் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது. பின்னர் அந்த காரையும், அதிலிருந்த ரேஷன் அரிசியையும்ள அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story