வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 60 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - அதிகாரிகள் தகவல்
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கடந்த மாதத்தில் 60 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று வட்ட வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்,
தமிழக அரசின் பொதுவினியோக திட்டத்தின் கீழ் ஏழை, எளிய குடும்பங்களுக்கு விலையில்லா ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் ரேஷன் அரிசி வேலூர் மாவட்டத்தில் இருந்து வாகனங்களில் கடத்தி சென்று ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவும், அதில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட பறக்கும்படை தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர்கள், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
அதன்பேரில் அதிகாரிகள் மற்றும் போலீசார் மாவட்டம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மூட்டை, மூட்டையாக சாக்குகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த 60 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் 35 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, 24 வழக்குகள் பதிந்துள்ளனர். மாவட்ட பறக்கும்படை தாசில்தார் சரவணன் தலைமையிலான அலுவலர்கள் குழுவினர் 12½ டன் அரிசியையும், வட்ட வழங்கல் அலுவலர்கள் 12½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து 38 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாட்டறம்பள்ளி தாலுகாவில் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 781 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களும், 6 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் டீக்கடைகள், உணவகங்களில் விதிகளை மீறி பயன்படுத்திய 10 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று வட்ட வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story