சென்னைக்கு அனுப்பப்பட்ட லாரியில் இருந்து 83 வெங்காய மூட்டைகள் திருட்டு; டிரைவர் உள்பட 5 பேர் கைது
தாவணகெரேயில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட லாரியில் இருந்து 83 வெங்காய மூட்டைகளை டிரைவரும், கிளனரும், அவருடைய கூட்டாளிகள் 3 பேரும் சேர்ந்து திருடினர்.
துமகூரு,
தாவணகெரேயில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட லாரியில் இருந்து 83 வெங்காய மூட்டைகளை டிரைவரும், கிளனரும், அவருடைய கூட்டாளிகள் 3 பேரும் சேர்ந்து திருடினர். குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிக்க நினைத்த அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஒரு டன் வெங்காயம்
தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா உச்சவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்குமார். இவர் சொந்தமாக லாரி டிரான்ஸ்போர்ட் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு உச்சவனஹள்ளி கிராமத்தில் இருந்து 1 டன் வெங்காயத்தை 183 சாக்கு மூட்டைகளில் கட்டி ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அந்த லாரி சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு செல்ல வேண்டும். அங்கு சென்று வெங்காய மூட்டைகளை வினியோகிக்க வேண்டும். அந்த லாரியை டிரைவர் சேத்தன் ஓட்டினார். கிளனராக சந்தோஷ் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அந்த லாரி துமகூரு மாவட்டம் சிரா தாலுகா தாவரகெரே எரகுண்டேஸ்வரா கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென லாரி உரிமையாளர் ஆனந்த் குமாரை, டிரைவர் சேத்தன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.
திருட்டு
அப்போது அவர் லாரி விபத்தில் சிக்கி விட்டது, தானும், கிளனர் சந்தோசும் காயம் அடைந்துவிட்டோம், லாரியில் இருந்து வெங்காய மூட்டைகளை அப்பகுதி மக்கள் எடுத்துச் சென்றுவிட்டனர் என்று கூறினார். மேலும் தானும், கிளனர் சந்தோசும் தற்போது பெட்டாகி கிராமத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வருமாறும் கூறினார்.
அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆனந்த்குமார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது லாரி, விபத்தில் சிக்கியதுபோல் சித்தரித்து வைக்கப்பட்டு இருந்ததும், லாரியில் இருந்த 83 வெங்காய மூட்டைகள் மட்டும் திருடப்பட்டு இருந்ததும் ஆனந்த்குமாருக்கு தெரியவந்தது.
கூட்டாளிகள் உடந்தை
இதையடுத்து அவர் இச்சம்பவம் குறித்து தாவரகெரே போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் டிரைவர் சேத்தன், கிளனர் சந்தோஷ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், வெங்காய மூட்டைகளை திருடி விற்க முயன்றதும், அதற்காக அவர்கள் லாரி விபத்தில் சிக்கியதுபோல் சித்தரித்து, உரிமையாளர் ஆனந்த்குமாரிடம் நாடகமாடி 83 வெங்காய மூட்டைகளை திருடி இருந்ததும் தெரியவந்தது.
மேலும் இவர்களுக்கு, இவர்களது கூட்டாளிகளான தாதாபீர், புடென் சாப், சேக் அலிகான் ஆகியோரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
5 பேர் கைது
அதாவது லாரி விபத்தில் சிக்கியதுபோல் சித்தரித்துவிட்டு, டிரைவர் சேத்தன் தனது கூட்டாளிகளான தாதாபீர் உள்பட 3 பேரையும் சம்பவ இடத்திற்கு சரக்கு வேனை வரவழைத்துள்ளார். பின்னர் லாரியில் இருந்து 83 வெங்காய மூட்டைகளை திருடி சரக்கு வேனில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு, ஆனந்த்குமாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது. மேலும் இவர்கள் 5 பேரும் இதேபோல் பலமுறை வெங்காய மூட்டைகளை திருடி விற்று பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து டிரைவர் சேத்தன், கிளனர் சந்தோஷ், இவர்களது கூட்டாளிகள் தாதாபீர், புடென் சாப், சேக் அலிகான் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தற்போது திருடப்பட்ட 83 வெங்காய மூட்டைகள் உள்பட ரூ.7.16 லட்சம் மதிப்பிலான வெங்காய மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.
குறுக்கு வழியில் அதிக பணம்...
தங்க, வைரம், வெள்ளி பொருட்களைப்போல் வெங்காயமும் தற்போது விலை மதிக்க முடியாத பொருளாக உருவெடுத்து வருகிறது. கடுமையான விலை உயர்வின் காரணமாக பல இடங்களில் திருடர்கள் வெங்காயத்தையும் விட்டு வைக்காமல் திருடிச் சென்றுவிடுகிறார்கள்.
அதேபோல் குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிக்க நினைத்து இங்கு ஒரு லாரி டிரைவர் தனது உரிமையாளரின் நம்பிக்கையை பொய்யாக்கி, வெங்காய மூட்டைகளை திருடி விற்க திட்டமிட்டார். ஆனால் போலீசில் சிக்கிக் கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story