எந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியாது கே.எஸ்.அழகிரி பேட்டி


எந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியாது கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 8 Dec 2019 11:15 PM GMT (Updated: 8 Dec 2019 7:08 PM GMT)

எந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியாது என கே.எஸ்.அழகிரி கூறினார்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நேற்று நகர காங்கிரஸ் அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் துரைவேலன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதா ஆட்சியில் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. பொருளாதாரத்தை பற்றி நரேந்திர மோடிக்கோ, சுப்பிரமணியசுவாமிக்கோ சரிவர தெரியவில்லை. வேண்டுமானால் மன்மோகன்சிங், சிதம்பரம் போன்ற பொருளாதார நிபுணர்களுடன் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

சதி வேலை

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டு நடத்தாமல் இருந்து வந்தது அ.தி.மு.க. தற்போது பல்வேறு சதி வேலைகளை செய்து வருகிறது. மாநில தேர்தல் ஆணையமும் நம்பிக்கையுடன் செயல்படவில்லை. 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவது ஏற்புடையது அல்ல.

இதுபோன்ற வேலைகளை செய்து உள்ளாட்சி தேர்தல் தள்ளி போவதற்கு அ.தி.மு.க. அரசு திட்டமிட்டு சதி செய்கிறது. தலைவர் பதவி இடங்களுக்கு மறைமுக தேர்தல் நடத்த கூடாது. இதன் மூலம் பணபலம் மிக்கவர்கள் தேர்வு செய்யப்பட்டு தவறான செயல்பாடுகள் நடைபெறும். மக்கள் சேவையாற்ற நினைக்கும் ஏழை, எளியவர்களை தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்படும்.

வெற்றி பெற முடியாது

எம்.ஜி.ஆருக்கு பிறகு இனி எந்த ஒரு நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியாது. ரஜினி 1995-ம் ஆண்டில் இருந்தே அரசியலுக்கு வருவேன் என்று கூறி வருகிறார்.

ரஜினி ஒரு ஆன்மிக வாதி. ஆன்மிகத்தை தான் விரும்புவார். அரசியலை விரும்பமாட்டார். அதனால் அவர் அரசியலுக்கு வரமாட்டார் இவ்வாறு அவர் கூறினார்.


Next Story