மதுரையில், நகை பட்டறையில் ரூ.40 லட்சம் தங்க தூள் வாங்கி மோசடி - மும்பையை சேர்ந்த 7 பேர் மீது வழக்கு


மதுரையில், நகை பட்டறையில் ரூ.40 லட்சம் தங்க தூள் வாங்கி மோசடி - மும்பையை சேர்ந்த 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Dec 2019 3:45 AM IST (Updated: 9 Dec 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

நகை பட்டறை நடத்தியவரிடம் ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்க தூள்களை வாங்கி மோசடி செய்த மும்பையை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை, 

மதுரை தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதியை சேர்ந்தவர் சலாம் (வயது 30). மதுரை எழுத்தாணிக்கார தெருவில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது கடையில் நகை தயாரிப்பின்போது கிடைக்கும் தங்க தூள்களை சேமித்து வைப்பது வழக்கம். இந்த தூள்களை அவ்வப்போது மும்பையை சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கி செல்வார்கள்.

அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி மும்பையில் இருந்து வியாபாரிகள் சிலர் மதுரை வந்தனர். இங்கு சலாமின் நகை பட்டறையில் உள்ள ரூ.40 லட்சம் மதிப்புள்ள 1170 கிராம் தங்க தூள்களை அவர்கள் வாங்கி சென்றனர். முன்பணமாக ரூ.2 லட்சம் கொடுத்தனர்.

மீதி தொகையை தங்கள் ஊருக்கு சென்றபின் ஒரு மாதத்தில் அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். அதை சலாமும் நம்பிவிட்டார்.

ஆனால் பல நாட்கள் ஆகியும் சேர வேண்டிய தொகையை அவர்கள் செலுத்தவே இல்லை. பல முறை கேட்டும் கொடுக்கவில்லை. இதையடுத்து தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த சலாம், இந்த சம்பவம் குறித்து தெற்குவாசல் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக மும்பையை சேர்ந்த அஸ்லாம் சேக், அசுதோஷ் ஆச்சார்யா, ஆசிஸ் ஆச்சார்யா, தீபக், இப்ராகிம் இஸ்மாயில், ஹாஜி, ஜெட்டி ஆகிய 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Next Story