உளுந்தூர்பேட்டையில், ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம் - அதிகாரிகள் நடவடிக்கை


உளுந்தூர்பேட்டையில், ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம் - அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Dec 2019 10:15 PM GMT (Updated: 8 Dec 2019 7:43 PM GMT)

உளுந்தூர்பேட்டையில் ஏரியை ஆக்கிரமித்து சாகுபடி செய்யப்பட்ட கரும்பு பயிர்களை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டையில் கீரனூர் ஏரி உள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் விவசாயம் செய்து வந்தனர். இதனால் மழைக்காலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது. இருப்பினும் ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டு இருந்ததால் ஏரிக்கு அதிக அளவில் தண்ணீர் வரவில்லை.

இந்த நிலையில் ஏரியை ஆக்கிரமித்து சாகுபடி செய்யப்பட்ட விவசாய பயிர்களை கோர்ட்டு உத்தரவின்படி அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி தாசில்தார் காதர்அலி தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஏரிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் ஏரியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பு பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். அப்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க உளுந்தூர்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story