தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றும் பணி தீவிரம்
தூத்துக்குடி மற்றும் காயல்பட்டினத்தில் குடியிருப்பு பகுதிகளில் ஒரு வாரமாக தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மற்றும் காயல்பட்டினத்தில் குடியிருப்பு பகுதிகளில் ஒரு வாரமாக தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.
பலத்த மழை
வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் தாமிரபரணி ஆற்றிலும் அதிக அளவில் தண்ணீர் கடலுக்கு சென்று வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. ஒரு வாரத்துக்கும் மேலாக மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில இடங்களில் மழைநீருடன், கழிவுநீரும் தேங்கி சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது. மாநகரில் கொசுத்தொல்லையும் அதிகரித்து உள்ளது.
நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல இடங்களில் மிதமான மழை பெய்தது. ஆனால் நேற்று காலை முதல் வெயில் அடித்தது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மழைநீரை அகற்றும் பணியில் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட மோட்டார்கள் மூலம் மழைநீர் உறிஞ்சப்பட்டு கால்வாய் மூலம் வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
காயல்பட்டினம்
காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு வாரத்துக்கும் மேலாக தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பொக்லைன் எந்திரம் கொண்டு கால்வாய் தோண்டியும், மோட்டார் என்ஜின் வைத்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருப்பதற்காக நகராட்சி சார்பில் பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டும், கொசு மருந்து அடிக்கப்பட்டும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் ஆய்வு
இந்த பணிகளை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் காளிமுத்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் புஷ்பலதா, பொதுப்பணி மேற்பார்வையாளர் சுதாகர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர். இந்த பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
Related Tags :
Next Story