கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரோந்து பணியில் ஈடுபட மேலும் 2 அதிநவீன படகுகள்


கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரோந்து பணியில் ஈடுபட மேலும் 2 அதிநவீன படகுகள்
x
தினத்தந்தி 8 Dec 2019 11:00 PM GMT (Updated: 8 Dec 2019 8:13 PM GMT)

கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு கடலில் ரோந்து பணியில் ஈடுபட மேலும் 2 அதிநவீன படகுகள் வெள்ளோட்டத்தில் விடப்பட்டது.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 72 கிேலாமீட்டர் தூரத்துக்கு கடல் பரப்பு உள்ளது. இந்த கடல் பகுதியை கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கண்காணித்து வருகிறார்கள். கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மாயமாகும்போது அவர்களை தேடி மீட்பது, கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவாமல் கண்காணிப்பு பணியை மேற்கொள்வது போன்ற பணிகள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடல் பகுதியை கண்காணிப்பதற்காக 4 அதிநவீன ரோந்து படகுகளும், கடற்கரை மணலில் ஓடும் நவீன 4 சக்கர வாகனமும் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த 4 படகுகளும் பழுதடைந்தன. அதைத்தொடர்ந்து சின்னமுட்டம் துறைமுகத்தில் பழுது நீக்கப்பட்டு 4 படகுகளும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளன. அதேபோல ரோந்து வாகனமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

புதிய படகுகள்

இந்தநிலையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு மேலும் 3 அதிநவீன ரோந்து படகுகள் வாங்கப்பட்டது. ரூ.2 கோடி செலவில் வாங்கப்பட்ட இந்த 3 படகுகளில் ஒரு படகு ஏற்கனவே ரோந்து பணியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற 2 படகுகளையும் ரோந்து பணியில் ஈடுபடுத்துவதற்காக கொல்கத்தாவில் இருந்து பயிற்சியாளர்கள் நேற்று கன்னியாகுமரிக்கு வந்தனர்.

அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு அந்த படகுகளை இயக்குவது பற்றி பயிற்சி அளித்தனர். அதைத்தொடர்ந்து அந்த 2 புதிய படகுகளும், அதிநவீன ஸ்கூட்டர் படகு ஆகியவை கன்டெய்னர் லாரி மூலம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

வெள்ளோட்டம்

அங்குள்ள படகு கட்டும் தளத்தில் அந்த படகுகளின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.

விரைவில் இந்த படகுகள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. அதேபோல கடற்கரை மணலில் ஓடும் இருசக்கர ரோந்து வாகனமும் புதிதாக வந்துள்ளது. அதன் வெள்ளோட்டமும் நடந்தது.

கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் படகுகள் வெள்ளோட்டம், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், சுடலைமணி தலைமையில் இருசக்கர வாகன ரோந்து பணியும் நடந்தது. இதில் உவரி, கூடங்குளம், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்தை சேர்ந்த 25 போலீசார் பயிற்சி பெற்றனர். 

Next Story