புதுச்சத்திரத்தில் கடல் சீற்றம்: படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் படுகாயம்


புதுச்சத்திரத்தில் கடல் சீற்றம்: படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 9 Dec 2019 4:15 AM IST (Updated: 9 Dec 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் பகுதியில் கடல் சீற்றத்தில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் 6 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.

புவனகிரி, 

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சாமியார்பேட்டையை சேர்ந்தவர் தேவராஜ் மகன் செல்வமணி (வயது 35). இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த சந்திரன்(55), மோகன்(50), ஆறுமுகம் மகன் செல்வராஜ்(35), தேவராஜ், செல்வராஜ் மகன் ராஜ்(17) ஆகியோருடன் நேற்று அதிகாலை 5 மணி அளவில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

சாமியார்பேட்டை கடற்கரையில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் சென்ற போது கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதில் படகு கடல் சீற்றத்தை எதிர்கொண்டு செல்ல முடியாமல் தடுமாறியது. இதற்கிடையே அந்த சமயத்தில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி பைபர் படகு தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் செல்வமணி உள்ளிட்ட 6 பேர் மீதும் படகு விழுந்ததில், அவர்கள் படுகாயத்துடன் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் படகில் மீன்பிடிக்க வந்த மீனவர்கள், செல்வமணி உள்ளிட்ட 6 பேரையும் மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் கடலில் கவிழ்ந்த பைபர் படகையும் கயிறு கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து படுகாயமடைந்த 6 பேரையும் சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் படகு கவிழ்ந்து விபத்து நடந்த சிறிது நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமி மகன் நாகப்பன்(45) என்பவர் தனக்கு சொந்தமான படகில் ஏழுமலை உள்ளிட்ட 5 பேருடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். அவர்கள் கடற்கரையில் இருந்து சிறிது தூரம் சென்ற போது, கடல் சீற்றத்தால் படகு தடுமாறியது.

இதில் ஏழுமலை படகில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கடலுக்குள் விழுந்து தத்தளித்தார். இதை பார்த்த நாகப்பன் உள்ளிட்டோர் ஏழுமலை மீட்டனர். இந்த சம்பவத்தில் ஏழுமலை காயமின்றி தப்பினார். சாமியார்பேட்டையில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story