கல்யாணில் அதிர்ச்சி சம்பவம் தலை துண்டிக்கப்பட்ட பெண் உடல் ரெயிலில் கொண்டு வரப்பட்டு வீச்சு தப்பி ஓடிய ஆசாமி யார்? போலீஸ் விசாரணை
தலை துண்டிக்கப்பட்ட பெண் உடலை ரெயிலில் கொண்டு வந்து ரெயில் நிலையம் அருகே வீசிச்சென்றவரை போலீசார் தேடிவருகின்றனர்.
மும்பை,
தலை துண்டிக்கப்பட்ட பெண் உடலை ரெயிலில் கொண்டு வந்து ரெயில் நிலையம் அருகே வீசிச்சென்றவரை போலீசார் தேடிவருகின்றனர்.
பையை வீசிவிட்டு தப்பிஓட்டம்
தானே மாவட்டம் கல்யாண் ரெயில் நிலையத்திற்குள் இருந்து நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கருப்பு நிற பையுடன் வெளியே வந்தார். பின்னர் அவர், வெளியே நின்ற ஒரு ஆட்டோவில் ஏறி பிவண்டி பகுதியில் உள்ள கோவா நாக்கா பகுதிக்கு செல்லவேண்டும் என டிரைவரிடம் கூறினார்.
அப்போது, அவர் வைத்திருந்த பையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த ஆட்டோ டிரைவர் இது குறித்து அந்த நபரிடம் விசாரித்தார்.
இதனால் பதற்றம் அடைந்த அந்த நபர் உடனடியாக அந்த பையை வெளியே வீசிவிட்டு அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.
தலை துண்டிக்கப்பட்ட பெண் உடல்
இதுபற்றி ஆட்டோ டிரைவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அந்த நபர் போட்டுச் சென்ற பையை திறந்து பார்த்தனர். அப்போது, அந்த பைக்குள் பாதி அழுகிய நிலையில் தலை துண்டிக்கப்பட்ட பெண் உடல் இருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் ரெயில் மூலம் பெண்ணின் தலையில்லா உடலை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரெயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தப்பி ஓடிய அந்த ஆசாமியை வலைவீசி தேடிவருகின்றனர்.
மேலும் பிணமாக மீட்கப்பட்ட பெண் யார்? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதை கண்டுபிடிக்கவும், அவரது தலை எங்கு வீசப்பட்டுள்ளது? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலை துண்டிக்கப்பட்ட பெண் உடல் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story