அனைத்து அரசு அலுவலகங்களிலும் திருப்பத்தூர் மாவட்டம் என பெயர் பலகை வைக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


அனைத்து அரசு அலுவலகங்களிலும் திருப்பத்தூர் மாவட்டம் என பெயர் பலகை வைக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 9 Dec 2019 10:30 PM GMT (Updated: 9 Dec 2019 4:00 PM GMT)

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலகங்களிலும் திருப்பத்தூர் மாவட்டம் என பெயர் பலகை வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சிவன்அருள் உத்தரவிட்டார்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூரில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் முடிந்தவுடன் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் சிவன்அருள் பேசியதாவது:-

பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் பணி செய்ய வேண்டும். மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் வருடக்கணக்கில் நாங்கள் மனு கொடுத்து வருகிறோம். அந்த மனுக்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று என்னிடம் தெரிவிக்கின்றனர். இதுபோல் இனி இருக்கக்கூடாது. மனிதாபிமானத்துடன் அரசு ஊழியர்கள் செயல்பட்டு மக்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அதிகளவில் உள்ளது. அந்த நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சேர்ந்து அங்கு வேளாண்துறை சார்பில் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். கோவில் நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.

புதூர்நாடு பகுதியில் நான் ஆய்வு மேற்கொண்டபோது, மலைவாழ் மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். வனத்துறை பள்ளிகள் தரம் உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். முதல்-அமைச்சர் அறிவித்த திட்டங்களை பொதுமக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

பல துறை அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் என்னை தொடர்பு கொண்டு மாவட்ட அலுவலகம் முழுமையாக செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏதாவது தேவைப்பட்டால் என்னிடத்தில் தெரிவிக்கலாம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும் திருப்பத்தூர் மாவட்டம் என பெயர் பலகை வைக்க வேண்டும், வேலூர் மாவட்டம் என பெயர் பலகை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது. பிளாஸ்டிக்கை ஒழிக்க முன்வர வேண்டும். நாள்தோறும் பிளாஸ்டிக் சோதனை நடத்தி கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

ஏலகிரிமலை வளர்ச்சிக்காக தொடர்ந்து கூட்டம் நடத்தப்படும். ஏலகிரி மலையில் பல்வேறு திட்டப்பணிகள் கொண்டு வரப்படும். மலையை மேம்படுத்தும் சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

திருப்பத்தூர் மாவட்டத்தை சுற்றி 21 கிராமங்களில் ஊதுபத்தி தொழில் செய்யும் பெண்கள் அதிகளவில் உள்ளனர். அவர்களுக்கு தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்களுக்கு அரசின் சலுகைகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story