மின்சார வாரியத்தின் கேங்மேன் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு- உடற்தகுதி தேர்வு


மின்சார வாரியத்தின் கேங்மேன் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு- உடற்தகுதி தேர்வு
x
தினத்தந்தி 9 Dec 2019 11:00 PM GMT (Updated: 9 Dec 2019 4:12 PM GMT)

மின்சார வாரியத்தின் கேங்மேன் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வுகள் பெரம்பலூரில் தொடங்கியது.

பெரம்பலூர்,

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கேங்மேன் பணிக்கு பெரம்பலூர்- அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்தவர்களுடைய சான்றிதழ் சரிபார்ப்பு பணி மற்றும் உடற்தகுதி தேர்வு பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் பொறியாளர் அலுவலக வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 18-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வுக்காக 1,739 விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த தேர்வுக்கு காலையில் 100 பேருக்கும், மதியத்திற்கு 100 பேருக்கும் என மொத்தம் 200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காலையில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தவர்கள் அதிகாலையிலேயே தேர்வு நடைபெறும் இடத்திற்கு ஆர்வத்துடன் வந்து உடற்தகுதி தேர்வுக்கான பயிற்சி பெற்றனர். கேங்க்மேன் பணிக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 5-ம் வகுப்பு தானாம். ஆனால் இந்த பணிக்கு பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பித்திருந்தனர். அவர்களும் தேர்வுக்கு வந்திருந்தனர்.

3 விதமான உடற்தகுதி தேர்வுகள்

காலை 8 மணிக்கு கேங்க்மேன் பணிக்கு விண்ணப்பித்தவர்களிடம் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை மின்வாரிய அதிகாரிகள் சரிபார்த்தனர். பின்னர் அவர்களுக்கு 3 விதமான உடற்தகுதி தேர்வுகள் நடந்தது. முதல் உடற்தகுதி தேர்வான 8 நிமிடத்துக்குள் மின்கம்பம் ஏறி, கிராஸ் ஆரம் பொருத்தி, கம்பத்தை விட்டு கீழே இறங்க வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றால் அடுத்த 2-வது உடற்தகுதி தேர்வான 2 நிமிடத்துக்குள் அலுமினிய மின் கடத்தியில் கிரிப்பர் செட் உள்ளிட்டவை பொருத்த வேண்டும்.

இதில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு 3-வது உடற்தகுதி தேர்வாக 31½ கிலோ எடையுள்ள "வி-கிராஸ்" ஆரம்களை தோளில் சுமந்தபடியே 100 மீட்டர் தூரத்தை 1 நிமிடத்துக்குள் நடந்து செல்ல வேண்டும். இந்த 3 உடற்தகுதி தேர்வுகளிலும் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

கண்காணிப்பு கேமராக்கள்

மின்கம்பம் ஏறி, அதில் கிராஸ் ஆரம் பொருத்தும் உடற்தகுதி தேர்வுக்கு பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் முறையாக செய்யப்பட்டிருந்தது. இதனால் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்ததுடன் உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டனர். அவர்கள் முதலில் மின்கம்பம் ஏறி, அதில் கிராஸ் ஆரம் பொருத்தி, கம்பத்தை விட்டு கீழே இறங்கும் உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டனர். அதில், தேர்ச்சி பெற்றவர்கள் தான் 2-வது உடற்தகுதிக்கு அனுப்பப்பட்டார்கள். 2-வது உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் 3-வது உடற்தகுதி தேர்வுக்கு அனுப்பப்பட்டனர். அதிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றதற்கான ஆணையினை மின்வாரிய அதிகாரிகள் வழங்கினர். கேங்மேன் பணிக்கான விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி மற்றும் உடற்தகுதி தேர்வுகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது.

ஒத்திவைக்கப்பட்ட...

இதனை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் கருப்பையா, சென்னை மின்பகிர்மானத்தை சேர்ந்த பொருள் மேலாளர் ஆர்.ஆர்.சாந்தி ஆகியோர் தலைமையில் மின்வாரிய அதிகாரிகள் கண்காணித்தனர். மேலும் மழையால் ஒத்திவைக்கப்பட்ட கடந்த 2-ந் தேதி நடைபெற இருந்த தேர்வு நாளை மறுநாளும் (வியாழக்கிழமை), 3-ந் தேதி நடைபெற இருந்த தேர்வு 13-ந் தேதியும், 4-ந் தேதி நடைபெற இருந்த தேர்வு 14-ந் தேதியும், 5-ந் தேதி நடைபெற இருந்த தேர்வு வருகிற 16-ந் தேதியும், 6-ந் தேதி நடைபெற இருந்த தேர்வு 17-ந் தேதியும், 7-ந் தேதி நடைபெற இருந்த தேர்வு 18-ந் தேதியும் நடைபெறவுள்ளது.

Next Story