நோயை குணமாக்குவதாக கூறி நூதன முறையில் தங்க நகைகள் பறிப்பு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு


நோயை குணமாக்குவதாக கூறி நூதன முறையில் தங்க நகைகள் பறிப்பு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Dec 2019 10:15 PM GMT (Updated: 9 Dec 2019 5:05 PM GMT)

நோயை குணமாக்குவதாக கூறி நூதன முறையில் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

துவாக்குடி,

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் சொசைட்டி தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 60). இவரது மகன்கள் பெரியசாமி (38), பெருமாள் (33). இருவருக்கும், திருமணமாகி விட்டது. இருவரும் கட்டிட வேலை செய்து வருகின்றனர்.

நேற்று வழக்கம்போல் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் பாப்பாத்தி, மருமகள்கள் பிரியா (27), நித்யா (25) ஆகியோர் இருந்தனர். அப்போது, காலை 10.30 மணி அளவில் கைரேகை ஜோசியம் பார்ப்பதாக கூறி மொபட்டில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். அவர் வெள்ளை சட்டையும், வெள்ளை வேட்டியும் அணிந்து இருந்தார்.

அந்த நபர் பாப்பாத்தி மற்றும் அவரது மருமகள்களிடம் பேச்சு கொடுத்து, உடலில் உள்ள நோய்களை குணமாக்குவதாகவும், தோஷங்களை நிவர்த்தி செய்வதாகவும், அதற்கு பூஜை செய்ய வேண்டும் என்றும், அதற்காக பிரியாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலி மற்றும் இளைய மருமகளான நித்யாவின் கையில் அணிந்திருந்த 2 மோதிரங்களை கழற்றி தரும்படி கேட்டுள்ளார்.

வலைவீச்சு

ஆனால் அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ளாதபோது, தான் வைத்திருந்த கருப்பு நிற மையை எடுத்து அவர்கள் மீது தடவினார். சிறிது நேரத்தில் அவர்கள் 3 பேரும் பாதி மயக்க நிலைக்கு சென்றனர். உடனே அவர்கள் அணிந்து இருந்த 2 பவுன் சங்கிலி, 2 மோதிரங்களை கழற்றி எடுத்துக் கொண்டு மொபட்டில் தப்பி சென்று விட்டார்.

சிறிதுநேரத்தில் மயக்கம் தெளிந்தபிறகு பாப்பாத்தி கூச்சலிட அக்கம்பக்கத்தினர் வந்தனர். அதற்குள் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். நூதன முறையில் நகைகளை பறித்தது குறித்து துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜோசியம் பார்ப்பதுபோல் வந்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story