குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வர வேண்டும் ப.சிதம்பரம் பேட்டி


குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வர வேண்டும் ப.சிதம்பரம் பேட்டி
x
தினத்தந்தி 9 Dec 2019 11:15 PM GMT (Updated: 9 Dec 2019 5:16 PM GMT)

குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் உள்ள திருமயம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ரகுபதி வீட்டிற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வந்தார். பின்னர் அவர் தி.மு.க. எம்.எல்.ஏ. ரகுபதி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து நிருபர்களுக்கு ப.சிதம்பரம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குடியுரிமை மசோதா என்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது. குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வர வேண்டும். எல்லா நாடுகளிலும் அகதிகள் சட்டம் இருக்கிறது. அகதிகளாக யார் விண்ணப்பிக்கலாம், யாரை அகதிகளாக ஒரு நாடு ஏற்றுக்கொள்ளும் என்ற நிபந்தனைகளோடு ஒரு நாடு அகதிகளை ஏற்றுக் கொள்ளலாம்.

அகதிகள் சட்டம்

அசாமில் ஏறத்தாழ ரூ.1,600 கோடியில் தேசிய குடிமக்கள் பட்டியல் தயாரிக்கிறேன் என மத்திய அரசு செலவு செய்து, அதனை அசாம் அரசு நிராகரித்துவிட்டது. அந்த பணமும் வீணானது. அப்போது நாங்கள் சொல்லியும் கேட்கவில்லை. பெரும்பான்மையை வைத்து இந்த சட்டத்தை பா.ஜ.க. அரசு நிறைவேற்றி விடலாம் என நினைப்பது தவறு. விளைவுகள் மிக மோசமாக இருக்கும். இதை ஒதுக்கி வைத்துவிட்டு அனைத்து அரசியல் கட்சிகளையும், அறிஞர்களையும் கலந்தாலோசித்து ஆராய்ந்து முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வருவதே விவேகம்.

நாளை மறுநாள் (அதாவது நாளை) உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. நீதிமன்றத்தில் தி.மு.க. வலுவான கருத்தை எடுத்து வைத்துள்ளது. வலிமையான காரணங்களையும் எடுத்து வைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story