வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி ஏ.சி.மெக்கானிக் தீக்குளிக்க முயற்சி


வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி ஏ.சி.மெக்கானிக் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 10 Dec 2019 4:15 AM IST (Updated: 10 Dec 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பணப்பிரச்சினையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஏ.சி.மெக்கானிக் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர், 

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். இதில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மற்றும் குறைகளை மனுக்களாக கலெக்டரிடம் அளித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சண்முகசுந்தரம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டு அங்கு முதல்முறையாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. எனவே வேலூரில் நடந்த கூட்டத்துக்கு வழக்கத்தைவிட மிகவும் குறைவாகவே பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில் பிற்பகல் 1.30 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கின் முன்பு ஆண் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை பறித்தனர். பின்னர் அவர் மீது தண்ணீர் ஊற்றி அமைதிப்படுத்தினர்.

போலீசார் விசாரணையில், அவர் வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டியை சேர்ந்த தேவேந்திரகுமார் (வயது 46), ஏ.சி.மெக்கானிக் என்பதும், பணப்பிரச்சினை தொடர்பாக கலெக்டரிடம் அளித்த மனுக்களின்மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதும் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் தேவேந்திரகுமாரை சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

தேவேந்திரகுமார் கலெக்டரிடம் அளிக்க வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி பெரியதெருவில் வசிக்கும் பேக்கரி உரிைமயாளர் கடந்த 2015-ம் ஆண்டு என்னிடம் இருந்து பல தவணைகளாக ரூ.4¼ லட்சம் மற்றும் 6½ பவுன் நகை கடனாக பெற்றார். பல மாதங்கள் ஆகியும் அவர் என்னிடம் பெற்ற பணத்தை திருப்பி தராமல் காலம் கடத்தி வந்தார். அதனால் எனது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் எனது பணம், நகையை பெற்றுத்தரும்படி கலெக்டரிடம் மனு அளித்தேன்.

அதன்பேரில் போலீசார் என்னையும், அந்த நபரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது அந்த நபர் 3 மாதங்களில் பணத்தை திருப்பி கொடுப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் அவர் கூறியபடி பணம், நகையை திருப்பி கொடுக்கவில்லை. அதைத்தொடர்ந்து 2 முறை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அளித்த புகாரின் பேரில் அவரிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணம், நகையை போலீசார் பெற்றுத்தரவில்லை. அந்த நபர் இதுவரை எனது பணம், நகையை தராமல் ஏமாற்றி வருகிறார். தற்போது எனது மனைவி, மகளின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறேன். எனவே அந்த நபரிடம் இருந்து எனது பணம், நகையை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story