திருப்போரூர் அருகே அடகு கடையில், துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்


திருப்போரூர் அருகே அடகு கடையில், துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 9 Dec 2019 11:15 PM GMT (Updated: 9 Dec 2019 6:43 PM GMT)

திருப்போரூர் அருகே அடகுக்கடைக்குள் புகுந்து துப்பாக்கியை காட்டி கடையின் உரிமையாளரை மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அலாரம் ஒலித்ததால் தப்பி ஓடிய அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் வசித்து வருபவர் விமல் சந்த் ஜெயின். இவர் திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் கிராமம் பழைய பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 12 ஆண்டுகளாக அடகு கடை மற்றும் கவரிங் நகை கடை நடத்திவருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் அவர் கடையை மூடுவதற்கு முன்பாக வரவு,செலவு கணக் குகளை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று முகமூடி அணிந்து கொண்டு கடைக்குள் 20 முதல் 22 வயது மதிக்கத்தக்க 3 மர்ம வாலிபர்கள் நுழைந்தனர். உடனே அவர்கள் தாங்கள் இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை விமல்சந்த் ஜெயினிடம் காட்டி மிரட்டி கடையில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

உடனே நிலைமையை சுதாரித்து கொண்ட கடையின் உரிமையாளர் விமல்சந்த் ஜெயின் சாதுர்யமாக அருகிலிருந்த ஆபத்துக்காலத்திற்கு தேவையான அலாரத்தை அழுத்தினார். இதைத்தொடர்ந்து அலாரம் ஒலிக்கவே பதறிப்போன் கொள்ளையர்கள் திருதிருவென முழித்தவாறு ‘எங்கே அகப்பட்டுவிடுவோமோ’ என்ற பயத்தில் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.

அதன் பின்னர், அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனத்தில் 3 கொள்ளையர்களும் ஏறி அமர்ந்து தப்பிச் சென்றனர். சரியான நேரத்தில் கடையில் இருந்த அலாரத்தை உரிமையாளர் அழுத்தியதால் அங்கு இருந்த பணம் மற்றும் நகை தப்பியது.

இதையடுத்து அலாரம் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் கடையின் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே கடையின் உரிமையாளர் காயார் மற்றும் திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடுவாஞ்சேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், திருப்போரூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, காயார் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி உள்ளிட்ட போலீசார் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், 3 மர்ம நபர்கள் துப்பாக்கி கொண்டுவந்து கடை உரிமையாளரை துப்பாக்கியால் மிரட்டுவது போல் இருந்த காட்சியை அவர்கள் பார்த்து சேகரித்து கொண்டனர். மேலும் காஞ்சீபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திலிருந்த கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்து கொண்டனர்.

இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தப்பி ஓடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், இவர்களிடம் துப்பாக்கி கிடைத்தது எப்படி? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Next Story